

பொதுத்துறை காப்பீடு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், கடந்த 9 மாதங்களில் 20 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஜி.சீனிவாசன் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த நிதியாண்டில் ரூ.14,000 கோடியாக இருந்த வணிகம், நடப்பாண்டில் ரூ.16,800 கோடியாக உயர்ந்துள்ளது. 2017 டிசம்பர் மாதத்துக்கான வணிகம் 26 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
மக்களிடையே காப்பீடுத் திட்டங்களை பயன்படுத்தும் அளவு அதிகரித்துள்ளதால், காப்பீடுத் துறையில் தொடர்ந்து வளர்ச்சி இருக்கும். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான காப்பீட்டுத் திட்டத்தை வழங்கியுள்ளது. அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தின் 4 கோடி மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் வழங்கியுள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான விமானப் போக்குவரத்து நிறுவனங்களை காப்பீடு செய்துள்ள இந்த நிறுவனம், அண்மையில் டெக்கான் ஏவியேஷன் நிறுவனத்தையும் காப்பீடு செய்துள்ளது.
தனி நபர் அளவிலான காப்பீடு வணிகத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். நடப்பு நிதியாண்டில் மட்டும் பத்தாயிரம் புதிய முகவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்கள், காப்பீடு ஆவணங்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்கும் வகையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். நாட்டில் தற்போது 1,400 சிறு கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
மொத்த வணிக அளவில் 15 சதவீத வணிகம் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளின் வாயிலாகவே கிடைக்கிறது. வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த இழப்பீடுகளை காப்பீடு செய்வதில் முக்கிய பங்காற்றுகிறோம். சொத்துப் பத்திரங்களில் உள்ள குறைபாடுகள் அல்லது தவறுகள் காரணமாக ஏற்படும் நிதியிழப்பை ஈடு செய்யும் வகையிலான காப்பீட்டுத் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளோம்.
செப்டம்பர் 2017-ல் முடிவடைந்த முதல் அரையாண்டில் ரூ.1,248 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 161 % அதிகமாகும். தமிழகத்தில் கடந்த ஆண்டு நேரிட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, முழு அளவில் காப்பீடு தொகை வழங்கினோம். பிற மாநிலங்கள் வறட்சி இல்லாததால், தமிழக விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கியதில், எங்களுக்கு பெரிய பிரச்சினை எழவில்லை என்றார்.