Last Updated : 21 Jan, 2018 07:07 AM

 

Published : 21 Jan 2018 07:07 AM
Last Updated : 21 Jan 2018 07:07 AM

சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பு: தலைவர்கள் முக்கிய முடிவுகளை அறிவிக்க வேண்டும் - டாவோஸ் மாநாடு குறித்து நரேந்திர மோடி கருத்து

ஒரு நாட்டின் கொள்கை மற்றும் முடிவுகளை அந்நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்கள் அறிவிக்க வேண்டும் என்றே சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். டாவோஸில் நடைபெற உள்ள சர்வதேச பொருளதாரா மாநாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் வெற்றிக் கதையை சர்வதேச சமூகம் அறிந்துகொள்ள இந்த மாநாட்டில் தான் பங்கேற்க போவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் கொள்கைகள், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை இம்மாநாட்டில் சர்வதேச சமூகம் அறிந்து கொள்ளும் வகையில் தான் வெளிப்படுத்தப் போவதாக பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் மிகச் சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகிறது, இதை சர்வதேச சமூகமும் அங்கீகரித்துள்ளது. குறிப்பாக சர்வதேச தரச் சான்று நிறுவனங்களும் இதை ஏற்று இந்தியாவின் தர மதிப்பீட்டை உயர்த்தியுள்ளன. டாவோஸ் மாநாடு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள மிகச் சிறந்த வாய்ப்பாகும். பரந்து விரிந்துள்ள இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) வரத்து அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமே சர்வதேச சமூகம் இந்திய அரசுடன் நேரடியாக பேச்சு நடத்தவே விரும்புகிறது. எந்த ஒரு கொள்கை முடிவும் அரசின் உயர் பதவியில் இருப்பவர்கள் வாயிலாகவே தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறது. இந்தியாவில் உள்ள வளங்கள், வளர்ச்சி வாய்ப்புகளை உயர் பதவி வகிப்பவர்கள் மூலமாக அறிந்துகொள்ளவே விரும்புகிறது என்று மோடி குறிப்பிட்டார்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) குறைந்துள்ள நிலையில் சர்வதேச சமூகத்தினரை முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுப்பது சரியான நடவடிக்கையாக இருக்குமா என்று கேள்வியெழுப்பியதற்கு, பொருளாதாரம் வளர்ச்சி பெற்று வரும் நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.

ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் எந்த ரூபத்திலும் வரலாம். எந்த ஒரு பிரச்சினையும் ஆய்வுக்குரியவைதான். சிறந்த விஷயங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் பலன்கள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. ஆனால் இப்போது குறைவான விமர்சனங்களும் அதிக எண்ணிக்கையில் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன என்று மோடிகூறினார். இதில் சிறந்த விஷயம் என்னவெனில் இப்போது ஜிடிபி, விவசாயம், தொழில்துறை மற்றும் சந்தை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாம் விரிவாக பேசி வருவதுதான் அவர் கூறினார்.

உள்நாட்டில் இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக உள்ளதாக சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது. தனது அரசு சமூக, பொருளாதார தளங்களில் மிகவும் உறுதியான கொள்கை முடிவுகளை செயல்படுத்தி வெளிப்படையான நிர்வாகத் திறனை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஜிஎஸ்டி குறித்து பேசப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசு இதை செயல்படுத்தவில்லை. மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்தை எட்ட காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. ஆனால் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டியை தனது அரசு செயல்படுத்தி விட்டதாக மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x