

மதுரை: வேளாண்மையோடு இணைந்து நாட்டுக் கோழி குஞ்சுகள் வளர்ப்பு மூலம் தொழில் முனை வோர் ஆகலாம். நாட்டுக்கோழி முட்டைகள் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருவாயை விட, அதனை மதிப்புக்கூட்டி குஞ்சாக விற்கும்போது கூடுதல் வருவாய் கிடைக்கும் என்கிறார் மேலூர் அருகே உதினிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் என்.அருண் (32). இவர் வேளாண்மையில் பட்டயப்படிப்பு படித்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் 50 சென்ட் இடத்தில் கோழிப் பண்ணை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: விவசாயத்தோடு இணைந்து கடந்த 5 ஆண்டு களாக நாட்டுக்கோழி குஞ்சு வளர்ப்பு மூலம் வருவாய் ஈட்டி வருகிறேன். ஒருநாள் குஞ்சாக இருக்கும்போது பராம ரிப்பது கடினம் என்பதாலும், நோய் தாக்கத்தால் இறந்துவிடும் என்பதாலும் ஒருமாத குஞ்சாக விற்பனை செய்கிறேன். இதில், முட்டைக்கோழி, கறிக் கோழி, கிராமப்பிரியா, கைராளி, நாமக்கல் 1, அசில் கிராஸ், பெருவிடை உட்பட 11 வகையான கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்கிறோம். முட்டையாக விற்றால் ஒரு முட்டைக்கு ரூ.10 கிடைக்கும். அதனையே குஞ்சாக மாற்றினால் ரூ.35 கிடைக்கும். அதனையே 0, 7, 15, 28 நாட்களில் தடுப் பூசி செலுத்தி ஒருமாதத்துக்கு பராமரித்து வளர்த்து கொடுத்தால் ரூ. 100 கிடைக்கும்.
தமிழக அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்முனைவோர் ஊக்குவிப்பு திட்டத்தில் மாதந்தோறும் 2 ஆயிரம் குஞ்சுகள் உற்பத்தி செய்து வழங்குறோம். லாப நோக்கமின்றி சேவை நோக்கத்தோடு வேளாண்மையோடு இணைந்த கால்நடை வளர்ப்பை லாபகரமாக மாற்றும் நோக்கில் குழுவாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். இதுவரை லட்சக்கணக்கான குஞ்சுகள் உற்பத்தி செய்து அளித்துள்ளோம். படித்த இளைஞர்கள், பெண்களை நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்குகிறோம். மாதத்துக்கு 2ஆயிரம் குஞ்சுகள் வளர்த்து விற்பனை செய்கிறோம் என்று கூறினார்
கோழிக்குஞ்சு உற்பத்தி எப்படி? - கோழிக்குஞ்சு உற்பத்திக்கு 50 சென்ட் இடம் போதும். கோழிக்குஞ்சு உற்பத்தி, முட்டைக்கோழி வளர்ப்பு, கறிக்கோழி வளர்ப்பு என தனித்தனியாக உள்ளது. இன்கு பேட்டர், கூண்டு வசதி, இயந்திரங்கள், தீவனங்கள், தடுப்பூசி மருந்துகள் என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும். முட்டையிலிருந்து குஞ்சு உற்பத்தியாக 20 நாட்களாகும். மின்விளக்கு வெளிச்சத்தில் தகுந்த வெப்பத்தில் இருக்க வேண்டும். தண்ணீர், தீவனம் கொடுத்து கண்காணிக்க வேண்டும். அதற்கு 0, 7, 15, 28 நாட்களில் தடுப்பூசி மருந்து செலுத்தி பராமரிக்க வேண்டும். 15 நாட்கள் மின்சார விளக்கின் வெப்பத்தில் இருக்க வேண்டும்.
அதேபோல், முட்டைக்கோழிக்கு காலை, மாலை என இருவேளை தீவனம் கொடுக்க வேண்டும். மக்காச்சோளம், கடல் சிப்பி, கருவாடு கலந்த தீவனம் வழங்க வேண்டும். ஆண்டுக்கு 220 முட்டைகள் இடும். அதேபோல், மக்காச்சோளம் மட்டும் தீவனமாக வழங்க வேண்டும். நன்கு வளர்ந்த கோழிகளை 3 மாதத்துக்குள் விற்றுவிட வேண்டும். அதற்குமேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகரிக்கும். ஒரு கிலோ குறைந்தது ரூ.150-க்கு விற்கலாம்.