

மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்கள் ஐ.டி பங்குகளில் முதலீடு செய்வது 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. கடந்த மே மாத முடிவில் ஐ.டி. பங்குகளில் முதலீடு செய்த தொகை 22,986 கோடி ரூபாயாக இருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலீடு செய்யப்பட்டிருந்ததுதான் குறைவான தொகையாக இருந்தது.
இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட்கள் நிர்வகிக்கும் பங்கு சார்ந்த முதலீடுகளில் ஐ.டி. பங்குகளின் பங்கு 10.25 சதவீத மாகும். மியூச்சுவல் ஃபண்ட்கள் நிர்வகிக்கும் பங்குசார்ந்த முதலீடு ரூ.2.25 லட்சம் கோடியாகும்.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் 24,438 கோடி ரூபாயை ஐ.டி.பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன. ஒரு மாதத்தில் 1,452 கோடி ரூபாய் அளவுக்கு ஐ.டி. பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்கள் விற்றிருக்கிறார்கள்.
ஐ.டி. பங்குகளில் தங்களுடைய முதலீட்டை குறைத்துவிட்டு வங்கி பங்குகளில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று ஃபண்ட் மேலாளர்கள் நினைத்ததே இதற்கு காரணம். கடந்த மே மாதம் ஐ.டி. துறை குறியீடு 3.4 சதவீதம் அளவுக்கு சரிந்தது. அதே சமயத்தில் சென்செக்ஸ் 8 சதவீத அளவுக்கு உயர்ந்தது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்கள் ஐ.டி பங்குகளில் முதலீடு செய்வதை குறைத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். கடந்த ஜனவரியில் 27,772 கோடி ரூபாய் அளவுக்கு ஐ.டி. பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இருந்தது. இப்போது 22,986 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துவிட்டது. மாறாக வங்கி பங்குகளில் முதலீடு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 48,419 கோடி ரூபாயாக மே மாதம் இருந்தது.