

அரூர்: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நிகழாண்டு போதியமழை இல்லாததால் மரக் கன்றுகள், பழக் கன்றுகள் நடவு குறைந்துள்ளதாக நர்சரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் 70 சதவீதம் மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் களையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். குறிப்பாக மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அரூர் கோட்டத்தில் தொழில் வளம் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாததால் விவசாயமே பொருளாதாரத்தின் மிக முக்கியமான ஒன்றான விளங்குகிறது.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மரக் கன்றுகள் நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் வட்டாரப் பகுதிகளில் தென்னை மரக்கன்று 150 ஹெக்டேரில் 30 ஆயிரம் இளங்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பாக்கு மரங்களும் நடப்பட்டுள்ளன. அதேபோல் பல வகையான பழ மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.
தென் பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள கொன்றம்பட்டி, கம்பைநல்லூர், ஈச்சம்பாடி, அனுமன் தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளிலும், வாணியாறு அணை மற்றும் அதன் கால்வாய்கள் செல்லும் பகுதிகளான மோளையானூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பூனை யானூர், மஞ்சவாடி, பாப்பம்பாடி, புதுப்பட்டி, வள்ளி மதுரை அணைக்கட்டு அமைந்துள்ள கீரைப்பட்டி, அச்சல் வாடி, தாதாராவலசு உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையொட்டி அரூர் சுற்றுப்பகுதிகளில் நர்சரிகள் அதிக அளவில் உள்ளன. வழக்கமாக ஜுன் முதல் நவம்பர் இறுதி வரை மரக் கன்றுகள் விற்பனை அதிகமாக நடந்து வருவது வழக்கம். இந்நிலையில் நிகழாண்டு தென் மேற்கு பருவ மழை போதிய அளவில் பெய்யாத நிலையில், வட கிழக்கு பருவ மழையும் இன்னும் தொடங்காததால் போதிய ஈரப்பதம் இன்றி மரக்கன்றுகள் நடுவது பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நர்சரி உரிமையாளர் அன்பு கூறும் போது, நிகழாண்டு போதிய மழை இல்லாததால் மரக் கன்றுகள், பழக் கன்றுகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை, பாக்கு கன்றுகளுடன் கூடுதலாக, எலுமிச்சை, மாதுளை, ஆரஞ்சு, சப்போட்டா, சாத்துக் கொடி, அத்தி, பலா, டிராகன் புரூட், வாட்டர் ஆப்பிள், ஸ்டார் ப்ரூட், சிம்லா ஆப்பிள் உள்ளிட்ட பழச்செடிகளும் விற்பனையாகும்.
மழையின்மை காரணமாக செடிகள் நட விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் நர்சரிகளில் 60 சதவீதம் கன்றுகள் விற்பனையாகாமல் உள்ளன, என்றார்.