Published : 20 Oct 2023 03:18 PM
Last Updated : 20 Oct 2023 03:18 PM

சிபில் ஸ்கோர் காரணங்களால் சிறு தொழில்கள் முடக்கப்படும் அபாயம்: தி. மலை வாசகர் வேதனை

திருவண்ணாமலை: கரோனா தொற்று பரவல் காலத்தில் முடங்கிய சிறு தொழில் நிறுவனங்களுக்கு ‘சிபில் ஸ்கோர்’ குறைவு எனக் காரணம் கூறி வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பதால் சிறு தொழில் முடக்கப்படும் அபாயம் உள்ளது என ‘இந்து தமிழ் திசையின்' உங்கள் குரல் மூலமாக திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் ஆணி உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வரும் தட்சிணாமூர்த்தி என்பவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “கரோனா தொற்று பரவல் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, சிறு தொழில்கள் அனைத்தும் 2 ஆண்டுகள் முடங்கின. சிறு தொழிலை நடத்தியவர்கள், பணியாற்றிய தொழிலாளர்கள் ஆகியோர் வேலையின்றி பாதிக்கப்பட்டனர். இதனால், வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கரோனா தொற்று குறைந்த பிறகு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. அதன்பிறகு திறக்கப்பட்ட சிறு தொழில்கள் மெல்ல, மெல்ல உற்பத்தியை தொடங்கியுள்ளன. அதேநேரத்தில், வங்கிகளில் பெற்ற கடன் தொகையும், கூட்டு வட்டி மூலமாக அதிகரித்தது. சிறு தொழிலுக்கு வாங்கிய வங்கி கடன்களில் சலுகை அளிக்கப்படவில்லை. இதனால், வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாமலும், சிறு தொழிலில் கூடுதல் முதலீடு செய்ய முடியாமலும், பல நிறுவனங்கள் திணறி வருகின்றன. தொழிலை விட்டு சிலர் வெளியேறிவிட்டனர். இப்போது, வங்கிகளில் கடன் தொகை பெற முயன்றால், ‘சிபில் ஸ்கோர்‘ இல்லை எனக் கூறி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் கடன் தர மறுக்கிறது.

நகைகளை அடகு வைத்து, கடனை அடைத்துவிட்டாலும், கடன் தொகையில் நிலுவை வைத்துள்ளவர்கள் எனக் கூறியும், பிற வங்கிகள் புதிய கடன் தொகையை தர மறுக்கிறது. கடனுக்கு ஈடாக, சொத்து பத்திரத்தை அடகு வைத்துக்கொண்டு கடன் கேட்டாலும் கொடுப்பதில்லை. ஒவ்வொரு விஷயத்துக்கும் சிபில் ஸ்கோர் என கூறினால், சிறு தொழில் நடத்துபவர்கள் எங்கே செல்வது. வெளியில் 5 சதவீதம், 6 சதவீதம் வட்டிக்கு வாங்கி சிறு தொழில் நடத்த வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எங்களுக்கும் மற்றும் எங்களை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன. எல்லோரையும் பாதுகாக்க வேண்டும். சிறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகளின் ஆதரவு கிடைப்பதில்லை.

பெரு முதலாளிகளுக்கு மட்டும் வங்கிகளின் ஆதரவு கிடைக்கிறது. கரோனா தொற்றில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க, வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதுகுறித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடன் பெற்றவர்களின் விவரங்களை கண்காணித்து மதிப்பீடு செய்து அறிக்கை கொடுப்பதுதான் சிபில் (credit information bureau of india limited). சிபில் என்பது கடன் குறித்த தகவல்களை வழங்குவதாகும்.

ஒரு வங்கியில் கடன் பெற்றுவிட்டு, மற்றொரு வங்கியில் கடன் பெற ஒருவர் முயற்சிக்கும்போது, அவரது கடன் விவரத்தை ‘சிபில்’ தெரிவித்துவிடும். மூன்று வகை புள்ளிகள் அடிப்படையில் சிபில் ஸ்கோர் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதில், 3-வது வகையில் இருப்பவர்களுக்கு கடன் கிடைக்காது. இவர்கள், ஏற்கெனவே பெற்றுள்ள கடனை அடைக்காமல் உள்ளவர்கள். இவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க முன்வராது. 2-வது வகையானது, கடன் தொகையை தாமதமாக செலுத்தியவர்கள் என மதிப்பிடப்படுகிறது. இவர்களுக்கும் சுலபமாக கடன் கிடைத்துவிடாது. முதல் வகையானது, கடன் தொகையை தவணை தவறாமல் செலுத்தியவர்கள்.

இவர்களுக்கு மட்டுமே வங்கிகள் கடன் கொடுக்கும். இதுதான், சிபில் ஸ்கோர் நிலையாகும். சிபில் ஸ்கோரை பின்பற்றி கடன் வழங்க வேண்டும் என வங்கியின் உயர்மட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடன் தொகையை செலுத்தியவர்களுக்கு கடன் வழங்கி வருகிறோம்” என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x