

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.
தற்போது கோவை மொத்த விலை சந்தைக்கு க.க.சாவடி, தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி பகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து தக்காளி வருகிறது. வர்த்தக மூலங்களின்படி, தமிழகத்தில் தக்காளி அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டதாலும், சந்தையின் வரத்து அதிகமாக இருப்பதாலும் பற்றாக்குறை ஏற்படவில்லை.
திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கத்தரி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. வர்த்தக மூலங்களின்படி, தற்போது சந்தைக்கு நாச்சிபாளையம், ஆலாந்துறை, ஒட்டன்சத்திரம், தேனி மற்றும் ஓசூரிலிருந்து கத்தரிக்காய் வருகிறது. கோவை சந்தைக்கு ஒட்டன்சத்திரம் மற்றும் உடுமலையிலிருந்து வெண்டை வருகிறது.
விலை முன்னறிவிப்பு திட்டக் குழு, ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி மற்றும் வெண்டை விலையில் ஆய்வுகளை மேற்கொண்டது. இதன்படி, அறுவடையின்போது, அதாவது டிசம்பர் மாத நிலவரத்தின்படி, தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.15 முதல் 17 வரையும், கத்தரியின் விலை ரூ.22 முதல் 24 வரையும், வெண்டையின் விலை ரூ.18 முதல் 20 வரையும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.