

நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டுக்குப் பிறகு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 518 புள்ளிகள் சரிந்தது. கடந்த 10 மாதங்களில் இந்த அளவுக்கு பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டதில்லை.
நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதலாவது ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு சலுகைகள் இல்லாததே பங்குச் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 25582 புள்ளிகளாக இருந்தது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் குறியீட்டெண் 163 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 7808 புள்ளிகளாகக் குறைந்தது.
ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் காலையில் ஏறுமுகத்திலிருந்தன. ஆனால் பிற்பகலில் மளமளவென சரிந்தது. இந்நிறுவன பங்குகளின் விலைகள் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை சரிந்தது. டெக்ஸ்மேகோ ரெயில் டிடாகர் வேகன்ஸ், காளிந்தி ரயில் நிர்மாண், கண்டெய்னர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன. முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 28 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
பிஹெச்இஎல் நிறுவனம் அதிகபட்சமாக 8.16%, என்டிபிசி 5.36%, டாடா பவர் 5.04%, கோல் இந்தியா 4.96%, லார்சன் அண்ட் டியூப்ரோ 4.35%, டாடா ஸ்டீல் 4.25%, ஓஎன்ஜிசி 4.23% அளவுக்கு சரிவைச் சந்தித்தன. எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் சரிவிலிருந்து தப்பவில்லை.
கட்டுமானத் துறை பங்குகள் 7.16 சதவீதமும், எரிசக்தித்துறை பங்குகள் 6.37 சதவீதமும், கேபிடல் கூட்ஸ் 4.80 சதவீதமும் சரிந்தன. மொத்தம் 2,234 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 770 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 4,295.79 கோடியாகும்.