

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கிலி கிராமத்தில் சீத்தாப் பழம் சாகுபடி மூலம் நிறைவான வருவாய் ஈட்டிய விவசாயிகள் நடப்பு ஆண்டில் மாவுப் பூச்சி பாதிப்பால் வருவாய் இழந்துள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.
சீத்தாப் பழங்கள் ரசாயனம் மற்றும் பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு இல்லாமல் விளைவதால் நுகர்வோரிடம் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக மலைக்கிராமங்களில் கரடுகளில் சாகுபடியாகும் சீத்தாப் பழங்கள் அதிக இனிப்பு சுவை கொண்டவையாக இருப்பதால் இவ்வகை பழங்களுக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கிலி, மலையூர், வாரக்கொல்லை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் விவசாய நிலங்களை ஒட்டிய வரப்புகளிலும், சிறிய கரடுகளிலும் 20-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சீத்தாப் பழ மரங்கள் நிறைந்துள்ளன. இங்குள்ள விவசாயிகள் ஆகஸ்ட் தொடங்கி நவம்பர் வரை நீடிக்கும் சீத்தாப் பழ விளைச்சல் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டி வருகின்றனர்.
சென்னை, கோவை, கேரளா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக வந்து சீத்தாப் பழங்களை வாங்கிச் செல்கின்றனர். கடந்த ஆண்டில் சீத்தாப் பழ விளைச்சலுக்கு ஏற்ற மழைப்பொழிவு இருந்ததால் தரமாகவும், பெரிதாகவும், அதிக அளவிலும் சீத்தாப் பழ காய்ப்பு இருந்தது.
ஆனால், நடப்பு ஆண்டில் செடிகளில் பிஞ்சு விடும் தருணத்தில் மழைப்பொழிவு குறைவாக இருந்ததால் செடிகளில் காய்ப்பு குறைந்தது. இதற்கிடையில், செடிகளில் இருந்த காய்களும் மாவுப் பூச்சி தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டன. எனவே, நடப்பு ஆண்டில் சீத்தாப் பழ வருவாயை இழந்து அப்பகுதி விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் கூறியது: கடந்த ஆண்டில் எங்கள் பகுதியில் மட்டும் சீத்தாப் பழங்கள் மூலம் ரூ.பல லட்சம் வருவாய் ஈட்டினோம். நாளொன்றுக்கு ஒரு விவசாயிக்கு 20 கூடைகள் வரை காய்கள் கிடைக்கும். தரமான காய்கள் கிலோ ரூ.20 வரை விற்பனையானது. நடப்பு ஆண்டில் பிஞ்சு விடும் தருணத்தில் மழை ஏமாற்றியதால் பூ, பிஞ்சு ஆகியவை உதிர்ந்தன.
செடிகளில் எஞ்சிய காய்களும் மாவுப் பூச்சி தாக்குதலுக்கு உள்ளானதால் அந்த காய்களை வாங்கிச் செல்ல வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஆண்டு எங்களுக்கு போதிய வருவாய் கொடுத்த சீத்தாவை நடப்பு ஆண்டில் வறட்சியும், மாவுப் பூச்சியும் அழித்து விட்டன. இவ்வாறு கூறினார்.