

புதுடெல்லி: இந்திய மின்னணுவியல் உற்பத்தி சூழல் விரிவுப் பணியில் கூகுளின் பங்கு மற்றும் அது சார்ந்த திட்டம் குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இருவரும் விர்ச்சுவல் முறையில் காணொளி மூலம் கலந்துரையாடினர். இதில் ஹெச்பி உடன் இணைந்து இந்தியாவில் குரோம்புக் அசெம்பிள் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டு வருவதற்காக தனது பாராட்டை பிரதமர் மோடி தெரிவித்தார்.
காந்திநகரில் உள்ள குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் (GIFT) கூகுளின் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தைத் நிறுவும் கூகுளின் திட்டத்தையும் பிரதமர் மோடி வரவேற்றார். மேலும், வரும் டிசம்பர் மாதம் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா நடத்தும் ஏஐ உச்சி மாநாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் வகையில் கூகுளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் ஜிபே மூலம் யுபிஐ சார்ந்து இந்தியாவில் நிதிச் சேர்க்கையை வலுப்படுத்துவது குறித்து கூகுள் வைத்துள்ள திட்டம் குறித்து சுந்தர் பிச்சை, பிரதமர் மோடி வசம் தெரிவித்தார்.