Published : 22 Jan 2018 11:09 AM
Last Updated : 22 Jan 2018 11:09 AM

பசு சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் குஜராத் அரசு

குஜராத் மாநிலத்துக்கு சுற்றுலா வருபவர்களின் முக்கிய கவனம் சிங்கமாக இருக்கும். சிங்கத்தை அடுத்து பசுவுக்கு அதிக கவனத்தை கொண்டு வரும் நோக் கில் குஜராத் அரசு ஈடுபட்டிருக்கிறது. கால்நடைகளுக்கான அரசு நிறுவனமான குஜராத் மாநில ‘கவ்சேவா ஆயோக்’ பசு சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.

பசு குறித்து அதிகம் தெரிந்து கொள்ள இருப்பவர்கள், மாநிலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பசு கூடங்களுக்கு அழைத்துச் சென்று இரு நாட்களுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக அரசு நிறுவனத் தலைவர் வல்லபா கதிரியா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பசு மூலம் பலவிதமான பொருளாதார பயன்களை பெற முடியும். ஆனால் இதுகுறித்து பலருக்கும் தெரிவதில்லை. பசு மூலம் கிடைக்கும் பொருளாதார பயன்களை விளக்குவதற்கு இந்த பசு சுற்றுலா உதவும்.

பசுவின் சாணம் மூலம் பயோகேஸ், உரம் உள்ளிட்டவை தயாரிக்க முடியும். இந்த 2 நாள் சுற்றுலா மூலம் இவற்றை எப்படி தயாரிப்பது, இவற்றை எப்படி தொழிலாக மாற்றுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் பலர் இந்த சுற்றுலாவுக்கு வந்திருக்கின்றனர்.

தவிர பசு கூடங்களில் பசுக்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொண்டவர்கள் தங்கள் கிராமங்களிலும் இதே முறைகளை பின்பற்றுகின்றனர். பல சுற்றுலாவாசிகள் இங்கு கற்றுக்கொண்டு பசு வளர்க்கவும், அதற்கென பிரத் யேக கூடங்கள் அமைத்தும் வருகின்றனர். மக்களிடம் பசு வளர்ப்பதை பரவலாக்கும் முயற்சியிலும் அரசு இருக்கிறது. கல்வி நிலையங்கள், சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களில் பசு வளர்ப்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அகமதாபாத், ராஜ்கோட் போன்ற இடங்களில் சிறைச்சாலைகளில் பசு கூடங்கள் உள்ளன. கோண்டால், அம்ரெலி உள்ளிட்ட சிறைகளில் பசு கூடங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தவிர பல கல்லூரி பல்கலைக்கழகங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன. இவ்வாறு கதிரியா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x