Published : 15 Oct 2023 05:25 PM
Last Updated : 15 Oct 2023 05:25 PM
கடலூர்: கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் விடாத சூழலில், கடும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இடையே கடலூர் மாவட்டத்தின் குறுவை சாகுபடி ஒருவாறாக நடந்து முடிந்துள்ளது.
இம்மாவட்டத்தில் தற்போது சம்பா பருவ சாகுபடி தொடங்கியுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப் பகுதிகளில் 51 ஆயிரத்து 582 ஹெக்டரும், மாவட்டத்தில் டெல்டா அல்லாத பகுதிகளில் 50 ஆயிரத்து 444 ஹெக்டரும் ஆக மொத்தமாக மாவட்டத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 26 ஹெக்டர் சம்பா பருவ நெல் சாகுபடிக்காக அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.
கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து முற்றிலுமாக நின்று போயுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளில் 19 ஆயிரத்து 120 ஹெக்டரில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். மீதியுள்ள பகுதியில் போர்வெல் மூலம் விவசாயிகள் நாற்று விட்டுள்ளனர்.
மேலும், டெல்டா அல்லாத பகுதியில் விவசாயிகள் முற்றிலுமாக போர்வெல் மூலம் நாற்று விட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வராத நிலையில், கடலூர் மாவட்ட டெல்டா பாசனத் தேவைக்காக வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி உள்ளிட்டவைகளுக்கு கீழணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை சற்றே கைகொடுத்தது. அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் மழை வலுக்கும்; பிரச்சினை சீராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை.
தற்போதுள்ள நிலையில் பயிர்களைக் காப்பாற்ற, கீழணையில் இருந்து வரும் குறைந்த அளவு தண்ணீர் வடக்கு ராஜன் வாய்க்காலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நீர்வரத்து முற்றிலுமாக நின்று விட்ட வீராணம் ஏரியில் இருந்து, இருப்பு தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப் பட்டுள்ளது.
பாசன வாய்க்காலில் வரும் மிகவும் குறைந்த அளவு தண்ணீரை, விவசாயிகள் நீரறைப்பு இயந்திரம் மூலம் இறைத்து, வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். இந்தத் தண்ணீர் பயிருக்கு போதுமானதாக இல்லை. காட்டுமன்னார்கோயில், குமராட்சி, சிதம்பரம், கிள்ளை, புவனகிரி, பு.முட்லூர், தச்சக்காடு அருண்மொழி தேவன்,
அலமேலுமங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். இப்பகுதிகளில் அவ்வப்போது பெய்த லேசான மழையால் நெற்பயிர்கள் பாதி முளைத்தும், முளைக்காமலும் உள்ளது. இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருகிறது. இதனால் முளைத்து சில நாட்களே ஆன நெற்பயிர்கள், கருகி வருகின்றன.
இதனால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தேவையான அளவு தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே நிலைமை சீராகும். அவ்வாறு தண்ணீர் வரவில்லை என்றால் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடியே இருக்காது. இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பின்னுக்கு தள்ளப்படும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT