Last Updated : 31 Jul, 2014 08:56 AM

 

Published : 31 Jul 2014 08:56 AM
Last Updated : 31 Jul 2014 08:56 AM

ஜூலை 31-க்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்யலாமா?

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு சிறப்பு கவுண்ட்டர்கள் உள்ளிட்ட வசதிகளை வருமான வரி அலுவலகம் ஆண்டுதோறும் செய்துவருகிறது. இருப்பினும் பலரால் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய முடிவதில்லை.

இதுபோன்றவர்கள் மனதில் குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாவிடில் என்னவாகும் என்ற கேள்வி பொதுவாக எழுவது இயல்பு. இது தவிர, பிற பொதுவான சந்தேகங்களை போக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

ஜூலை 31-க்குப் பிறகு வரு மானவரி தாக்கல் செய்யலாமா?

31ம் தேதிக்கு பிறகும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். அதாவது ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மார்ச் 30-ம் தேதி வரை கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். ஆனால் செலுத்த வேண்டிய வருமான வரித் தொகைக்கு ஒரு சதவீத வட்டியையும் கூடுதலாக செலுத்த வேண்டும்.

ஓராண்டுக்குப் பிறகு தாக்கல் செய்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. ஓராண்டுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டால் வட்டியுடன் பிரிவு 271 எப்-ன் படி ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

தொழில் நிறுவனமாக இருந்தால் குறித்த காலத்திற்குள் வரி தாக்கல் செய்யாவிடில் அந்த நிதி ஆண்டில் ஈட்டிய லாபம் அல்லது நஷ்டக் கணக்கை அடுத்த நிதி ஆண்டுக்குக் கொண்டு செல்ல முடியாது.

முதலீட்டு லாபத்தையும் அடுத்த நிதி ஆண்டுக் கணக்கில் கொண்டு வர முடியாது.

80 சி பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறுவதற்கான காரணிகளை பூர்த்தி செய்யத்தவறி விட்டால், அத்தொகையை திரும்பப்பெற முடியுமா?

விடுபட்டுப்போன விலக்கு விவரத்தை மறுபடி திருத்திய வரி கணக்கை தாக்கல் செய்வதன் மூலம் பெறலாம். ஆனால் இத்தகைய விலக்கு பெறுவதற்கு ஓராண்டு வரைதான் அவகாசம் உள்ளது.

நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு பெறுவது எப்படி?

வருமான வரி விலக்கு 80ஜி பிரிவின் கீழ் நன்கொடைகளுக்கு விலக்கு பெறலாம். விண்ணப்பத்தில் நன்கொடை அளித்தவர் பெயர், அவரது பான் அட்டை எண், அவரது முகவரி விவரம், அளிக்கப்பட்ட நன்கொடை அளவு ஆகியவற்ரைக் குறிப்பிட வேண்டும்.

சுய மதிப்பீட்டு வரி செலுத் தாமல் வரி தாக்கல் செய்தால் எத்தகைய விளைவுகள் நேரிடும்?

சுயமதிப்பீட்டு வரி செலுத் தாமல் வரி கணக்கு தாக்கல் செய்வதை தவிர்க்கும் பொருட்டு 2013ம் ஆண்டு நிதி மசோதா ஏற்படுத்தப்பட்டது. இதில் 139(9) பிரிவின்படி வரி செலுத்தாத கணக்கு முறையற்ற வருமானமாகவே கருதப்படும். இத்தொகைக்கு வட்டியோடு கூடிய வரியை செலுத்த வேண்டும். எனவேதான் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும்போதே உரிய வரி செலுத்தும் முறை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

வீட்டு வாடகைக்கு வருமான வரியிலிருந்து விலக்கு பெறும் ஊழியர், அதற்கு வீட்டு உரிமையாளரின் பான் அட்டை விவரத்தை அளிக்க வேண்டி யது கட்டாயமா?

வரி செலுத்துவோர் வீட்டு வாடகையாக ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்துக்குமேல் விலக்கு பெற மனு தாக்கல் செய்தால், வீட்டு உரிமையாளரின் பான் அட்டை எண் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்விதம் வீட்டு உரிமையாளரிடம் பான் அட்டை இல்லையெனில் அவரிடமிருந்து சுய ஒப்புதல் சான்று பெற்று அதை தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபிறகு அது பரிசீலிக்கப் படுகிறது என்பதை எவ்விதம் அறிந்து கொள்ள முடியும்?

சிபிசி பிராஸசிங் இணையதளத்துக்குச் சென்று அங்கு மின்னணு வரி தாக்கல் பகுதியில் உங்களது படிவத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x