

வேலூர்: கந்தனேரி மணல் குவாரியில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டதால், மணல் கிடைக்காமல் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், எம்-சாண்ட் கிடைப்பதிலும் சிக்கல் இருப்பதால் மணல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தனியார் கட்டுமான நிறுவனத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட அரும்பருதியில் கடந்த ஓராண்டாக இயங்கி மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கந்தனேரி கிராம பாலாற்றில் மணல் அள்ளும் பணி நடைபெற்று வந்தது. பொதுப்பணித்துறை இணையதளம் மற்றும் செல்போன் செயலி வழியாக முன்பதிவு செய்யப்படும் லாரிகளில் மணல் விற்பனை நடைபெற்றது.
கந்தனேரியில் லாரிகளுக்காக இயக்கப்படும் இந்த குவாரியில் இருந்து மணல் அள்ளப்பட்டு வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு டிப்பர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்டன. பாலாற்றில் இருந்து எடுக்கப்படும் மணலுக்கு கட்டுமான நிறுவனங்களில் நல்ல வரவேற்பு இருக்கும். தரமான மணல் என்பதால் பாலாற்று மணலுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்படும்.
இதற்கிடையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்க துறையினர் கடந்த மாதம் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மணல் விற்பனையில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்களை கைப்பற்றிய நிலையில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு புகாரும் எழுந்தது. தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேட்டை தொடர்ந்து குவாரிகளில் இருந்து மணல் அள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மறு உத்தரவு வரும்வரை மணல் குவாரியை இயக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த திடீர் உத்தரவால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. தனியார் கட்டுமான நிறுவனங்களில் மணல் இருப்பு இல்லாமல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மணல் குவாரி இயங்குவது குறித்த தெளிவான அறிவிப்பு இல்லாததால் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் உள்ளனர்.
இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தினர் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மணல் குவாரி இயங்கி வந்ததால் மணலை நம்பி கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்து வந்தோம். எம்-சாண்டில் கட்டப்படும் வீடுகளைவிட ஆற்று மணலில் கட்டப்படும் வீடுகளின் கட்டுமான செலவு சற்று அதிகமாக இருக்கும். அதை வீட்டின் உரிமையாளர்களும் விரும்புவார்கள்.
ஆற்று மணலுக்கு ஏற்ப கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தோம். திடீரென மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். தொடர் மழை காரணமாக எம்-சாண்ட் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. ஒரு சிலர் மாட்டு வண்டிகளில் இருந்து கள்ளத்தனமாக எடுத்துவரப்படும் மணலில் வீடு கட்டி வரு கின்றனர். ஆனால், எங்களைப் போன்ற தனியார் கட்டுமான நிறுவ னங்கள் அதை செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். மணல் குவாரி குறித்து அரசு தெளிவாக தெரிவிக்க வேண்டும்’’ என்றனர்.
இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘அமலாக்க துறை சோதனைக்குப் பிறகு அவர்கள் அடிக்கடி எங்கள் துறையின் உயர் அதிகாரிகளை விசாரணைக்காக அழைக்கிறார்கள். அவர்கள் கேட்கும் விவரங்களை அளிக்க வேண்டி இருப்பதால் குவாரி பணிகளில் தொய்வு ஏற்பட்டு மணல் அள்ளும் பணியை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளோம்.
தற்போது, அமலாக்க துறையின் விசாரணை ஓரளவுக்கு முடிந்துள்ளதால் குவாரிகளில் தேங்கியுள்ள மணலை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். ‘ஆன்லைனில்' முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் மணல் விற்பனை செய்யப்படுகிறது. கந்தநேரி மணல் குவாரியில் இன்று (திங்கட்கிழமை) மட்டும் சுமார் 60 லாரிகளில் மணல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணல் காட்டுப்பள்ளி துறைமுகம், எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் வந்து இறங்கியுள்ளன. அங்கிருந்து மலேசியா மணலை ‘ஆன்லைனில்' முன்பதிவு செய்து எடுத்துக்கொள்ளலாம்’’ என்றனர்