

புதுடெல்லி: இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
உள்நாடு, சர்வதேச வழித்தடங்களில் எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ அறிமுகப்படுத்துகிறது. இது, அக்டோபர் 6 முதல் அமலுக்கு வருகிறது. விமான எரிபொருளின் விலை உயர்வு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாகவே ஏடிஎஃப் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விமான நிறுவனத்தின் இயக்க செலவுகளில் இது பெரும்பங்கை கொண்டுள்ளது.
எனவே, இதனை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் தூரத்தின் அடிப்படையில் இந்த கூடுதல் எரிபொருள் கட்டணத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 500 கி.மீ. தூரத்துக்கு ரூ.300, 501-1,000 கி.மீ.க்கு ரூ.400, 1,001-1500 கி.மீ.க்கு ரூ.550, 1,501-2,501 கி.மீ.க்கு ரூ.650, 2,501-3,500 கி.மீ.க்கு ரூ.800, 3,501 கி.மீ.க்கு மேல் ரூ.1,000 எரிபொருள் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இண்டிகோ தெரிவித்துள்ளது.
இண்டிகோவைத் தொடர்ந்து மற்ற விமான நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.