Published : 06 Oct 2023 04:00 AM
Last Updated : 06 Oct 2023 04:00 AM

தமிழ்நாடு வேளாண் பல்கலை. ஆய்வாளர்களின் நீர் வெப்ப திரவமாக்கல் கலனுக்கு தேசிய காப்புரிமை

கோவை: வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் வெப்ப திரவமாக்கல் கலனுக்கு தேசிய காப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறையின் ஆராய்ச்சியாளர்களான ர.திவ்யபாரதி, ப.சுப்பிரமணியன் ஆகியோர் மூலம் நீர் வெப்ப திரவமாக்கல் கலன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கலனுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகத்தால் தேசிய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண் பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘‘நீர் வெப்ப திரவமாக்கல் கலனானது, கலக்குதல், சூடாக்குதல், குளிர்வித்தல் ஆகிய பாகங்களைக் கொண்ட உயர் அழுத்த கலனாகும்.

இது, ஈரத் தன்மை அதிகம் உள்ள உயிரிக் கழிவுகளிலிருந்து உயிரி எண்ணெய் உற்பத்தி செய்ய உதவுகிறது. நீர் வெப்ப திரவமாக்கல் முறையில் கரி, நீர் திரவம் ஆகியவை உப பொருளாக கிடைக்கின்றன. உயிரி எண்ணெயை நேரடியாக உலைகளில் எரிபொருளாகவும், சுத்திகரித்து வாகனங்களில் எரி பொருளாகவும் பயன்படுத்தலாம்.

கரியானது, திட உயிரி எரிபொருளாக பயன்படுவதுடன் மண் வளத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இம்முறையில் பெறப்படும் மற்றொரு உப பொருளான நீர் திரவம் அங்கக ரசாயனங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இதில் உள்ள ரசாயனங்களை தொழிற்சாலைகளில் உகந்த முறைகள் மூலம் பிரித்தெடுத்து பயன்படுத்தலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x