Published : 06 Oct 2023 04:08 AM
Last Updated : 06 Oct 2023 04:08 AM

முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்போடு மதுரையில் நின்றுபோன ‘டைடல் பார்க்’

மதுரை: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘டைடல் பார்க்’ திட்டம் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இந்தத் திட்டம் எப்போது வரும் என தென் மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் உள்ளன. இதன் மூலம் 3 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. தற்போது மின்கட்டண உயர் வால் இந்த நிறுவனங்கள் இயங்க முடியாத நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

மின் உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி அக்.16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மின்கட்டண உயர்வை அரசு திரும்பப் பெறாவிட்டால் மதுரை உட்பட தென்மாவட்டங்களில் வேலை வாய்ப்பு வழங்கி வந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மற்றொருபுறம் தென் மாவட்டங்களில் படித்து முடிக்கும் இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவன வேலை வாய்ப்புக்காக கோவை, சென்னை, பெங்களூருவுக்கு இடம் பெயர் கின்றனர். அதனால், அந்த இளைஞர்கள் திருமணத்துக்குப் பிறகு சொந்த ஊர் வர முடியாமல் நிரந்தரமாகவே வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் தங்கும் நிலை உள்ளது.

இந்நிலையைப் போக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றதும் மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில் ரூ.600 கோடியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் 10,000 பேர் வேலை வாய்ப்புப் பெறுவர் எனவும் அறிவித்திருந்தார். தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் டைடல் பார்க்குக்கு மதுரை மாட்டுத் தாவணி அருகே மாநகராட்சியும் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி எல்காட்டிடம் ஒப்படைத்தது.

நிலம் ஒப்படைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2010-ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது உறுதியளித்தபடி அந்த இடத்தில் நவீன காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஏற்கெனவே மாட்டுத் தாவணியில் எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், தனியார் வணிக வளாகங்கள், நெல் வணிக வளாகம், காய்கறி, பழம், பூ, மீன் மார்க்கெட் போன்றவை உள்ளதால் மாட்டுத்தாவணி தற்போது நெரிசலில் சிக்கித் திணறு கிறது. மீண்டும் அதே பகுதியில் டைடல் பார்க் அமைக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்தது.

டைடல் பார்க் அமைப் பதற்கான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், திட்டத் தின் நிலை என்ன? என அறிந்து கொள்ளவும், அதைக் கொண்டு வருவதற்கும் மாவட்ட ஆட்சியர், உள்ளூர் அமைச்சர்கள் எந்த ஆர்வமும் காட்டாமல் இருக் கின்றனர்.

தமிழகத்தில் சென்னை, கோவையில் மட்டுமே டைடல் பார்க் உள்ளதால் அந்த நகரங் களில் மட்டுமே முக்கிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளன. அதனால், ஐடி வேலைக்காக பெங்களூரு, ஹைதராபாத் சென்ற இளைஞர்கள் தற்போது சென்னை, கோவை செல்கின்றனர்.

மதுரையில் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருந்தாலும், அந்த நிறுவனங்களில் முதல்நிலை ஐடி ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகள் மிக குறை வாகவே உள்ளன. மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தும் தற்போது வரை கிடப்பில் உள்ளதால் இந்தத் திட்டம் வருமா? வராதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தேகத்துக்கு தெளிவு பிறக்க மாவட்ட ஆட்சியர், உள்ளூர் அமைச்சர்கள் மதுரை டைடல் பார்க் திட்டம் பற்றிய விவரங்களையும், அதற்கான முன்னேற்றங்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x