சாமந்திப்பூ, செண்டு மல்லி விலை வீழ்ச்சி: கிருஷ்ணகிரி, ஓசூரில் மலர் செடிகளை அழிக்கும் அவலம்

சூளகிரி பகுதியில் உள்ள வயலில் அறுவடை செய்யாததால், செடிகளில் பூத்துக் குலுங்கும் செண்டு மல்லி.
சூளகிரி பகுதியில் உள்ள வயலில் அறுவடை செய்யாததால், செடிகளில் பூத்துக் குலுங்கும் செண்டு மல்லி.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி/ஓசூர்: சாமந்திப்பூ மற்றும் செண்டு மல்லி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், கிருஷ்ணகிரி , ஓசூர் பகுதியில் சாகுபடி செய்துள்ள சாமந்தி, செண்டு மல்லிச் செடிகளை டிராக்டர் மூலம் விவசாயிகள் அழித்து வருகின்றனர். மலர் சாகுபடிக்கு மானியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், பாகலூர், பேரிகை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் கோயில் திருவிழாக் கால விற்பனையை மையமாக வைத்து விவசாயிகள் பல்வேறு மலர்களை காலத்துக்கு ஏற்ப சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக, சாமந்திப்பூ 5 ஆயிரம் ஹெக்டேரிலும், செண்டுமல்லி ஆயிரம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

நிகழாண்டில், வரலட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தியின் போது, மலர் மகசூல் அதிகரித்து, விலை குறைந்தது. தொடர்ந்து அதே நிலை நீடிப்பதால், விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள மலர் செடிகளை அழித்து மாற்றுப் பயிருக்கு தயாராகி வருகின்றனர்.

இதுதொடர்பாக சூளகிரி, ஓசூர் பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி முடிந்த நிலையில் சாமந்தி, செண்டுமல்லிப் பூக்களின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சாமந்திப்பூ தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.7 வரையும், செண்டுமல்லி ரூ.15-க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், எங்களுக்குப் பராமரிப்பு செலவு மற்றும் அறுவடை கூலி கிடைப்பதில்லை. இதனால், அறுவடை தாமதம் ஏற்பட்டு

சாமந்திப்பூக்கள் உதிர தொடங்கி உள்ளது. எனவே, ஓசூர் சாரனப்பள்ளி பகுதியில் விவசாயிகள் வயல்களில் சாமந்திப்பூ செடிகளை டிராக்டர் மூலம் அழித்து, நிலத்தை உழுது மாற்றுப் பயிருக்கு தயார் செய்து வருகின்றனர்.

இதேபோல, சூளகிரி பகுதி விவசாயிகள் பலர் சாமந்திப் பூக்களை அறுவடை செய்யாமல் தோட்டத்தில் விட்டுள்ளனர். சிலர் அறுவடை செய்து சாலையோரம் வீசியுள் ளனர். வரும் விஜயதசமி, ஆயுத பூஜையின்போது சாமந் திப்பூ, செண்டு மல்லிக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சில விவசாயிகள் மனம் தளராமல் தோட்டத்தைத் தொடர்ந்து பராமரித்து வருகின் றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு காரணங்களால் வருவாய் இழப்பைச் சந்திக்கும் மலர் சாகுபடிக்கு மானியம் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in