

மும்பை: இந்திய வாகன சந்தையில் மீண்டும் பஜாஜ் நிறுவனத்தின் சன்னி இருசக்கர வாகனம் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை மின்சார வாகனமாக இந்தியாவை வலம் வர உள்ளது சன்னி. அது குறித்து பார்ப்போம்.
கடந்த 1990-களில் இந்திய இருசக்கர வாகன சந்தையின் விற்பனையில் றெக்கை கட்டி பறந்தது சன்னி ஸ்கூட்டர். மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம், 3.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், 60 சிசி திறன் கொண்ட 2 ஸ்ட்ரோக் என்ஜின் போன்றவற்றை கொண்டிருந்தது. எடை குறைவான இந்த வாகனம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைத்து தரப்பு வயதினரையும் கவர்ந்திருந்தது. இந்த சூழலில் 2000-க்கு முன்னதாக சன்னி வாகன உற்பத்தியை நிறுத்தியது பஜாஜ்.
இந்த சூழலில் மீண்டும் புதுப்பொலிவுடன் மின்சார வாகனமாக உயிர் பெற்றுள்ளது சன்னி. பஜாஜ் நிறுவனம் சட்டாக் இரு சக்கர வாகனத்தை மின்சார வாகனமாக அறிமுகம் செய்தது. அதேபோல சன்னியும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சன்னி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு தொடக்க நிலையில் இருப்பதாகவும். 2025-ல் இந்த வாகனம் அறிமுகமாகும் என்றும் தகவல். பழைய சன்னி உடன் ஒப்பிடும்போது சன்னி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று தெரிகிறது.
குறிப்பாக முகப்பு விளக்கு, வாகன அமைப்பு போன்றவை சன்னியில் மாறாது என்று தெரிகிறது. இதற்கான பேட்டரி வாகனத்தின் இருக்கைக்கு கீழே இருக்கும் என தெரிகிறது. இந்த வாகனத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்னி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு பணி மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.