Published : 03 Oct 2023 04:06 AM
Last Updated : 03 Oct 2023 04:06 AM

ஆன்லைன் விற்பனையிலும் கோ-ஆப்டெக்ஸ் அசத்தல்: ரூ.1.50 கோடிக்கு விற்பனை என அமைச்சர் பெருமிதம்

சேலத்தில், புதுப்பிக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையை, அமைச்சர்கள் கே.என்.நேரு, காந்தி ஆகியோர் திறந்து வைத்து, முதல் விற்பனை தொடங்கி வைத்தனர். உடன் ஆட்சியர் கார்மேகம். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: கோ - ஆப்டெக்ஸ் ஜவுளி விற்பனை நிலையம், ஆன்லைன் வர்த்தகத்திலும் ரூ.1.50 கோடிக்கு ஜவுளி விற்பனை செய்து, தனது முத்திரையினை பதித்து வருகிறது என்று கைத்தறி- துணி நூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் புதுப்பிக்கப்பட்டு நவீனப் படுத்தப்பட்ட கோ - ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார். பின்னர், முதல் விற்பனையை கைத் தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் காந்தி செய்தியாளர்களிடம் கூறியது: திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்பதற்கு முன்னர், நஷ்டத்தில் இயங்கி வந்த கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தை, முதல் ஆண்டிலேயே சுமார் ரூ.7 கோடி நஷ்டத்தை ஈடுகட்டி ரூ.9.49 கோடி லாபத்தில் இயங்கிடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சில மாதங்களுக்கு முன்னர், சேலம் கோ - ஆப்டெக்ஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் நவீன மயமாக்கப்பட்டு, நகரும் மின் படிக்கட்டுகளுடன், 2 தளங்களில் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது. சேலம் கோ - ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில்,

1,000 புதிய ரகங்கள் மற்றும் பட்டு, காட்டன் சேலைகள் உள்ளிட்ட ஜவுளிகளில் பல்வேறு புதிய ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வரிடம், தோடர் உள்ளிட்ட மலைவாழ் மக்கள், தாங்கள் விரும்பி அணியக்கூடிய எம்பிராய்டிங் செய்யப்பட்ட துணி வகைகளை கோ-ஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்ய கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில், ஊட்டியில் இதற்கான கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்தப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டு, அவை கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் வர்த்தகத்திலும் கோ-ஆப் டெக்ஸ் ரூ.1.50 கோடி மதிப்பில் விற்பனை செய்து தனது முத்திரையினைப் பதித்து வருகிறது, என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், கோ - ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் ஆனந்த குமார், கைத் தறி துறை ஆணையர் விவேகானந்தன், கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் காங்கேயவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x