

சி
கார் பிடிப்பீர்களா? சீமை சுருட்டு சார். சிகாருக்கு பெயர் போன ஊர் கியூபா. அந்நாட்டின் உருப்படியான ஒரு சில விஷயங்களில் ஒன்று. இன்னொன்று ‘பகார்டி’ ரம். சொர்கபுரிக்கு கூட்டிச் செல்லும் அந்த சரக்கு பிறந்ததும் கியூபாவில்!
நாம் பேசப்போவது சிகார், பகார்டி பற்றியல்ல. குதூகல ஆசையை குழி தோண்டி புதையுங்கள். நாம் அலசப்போவது கியூபாவின் பரம வைரி அமெரிக்கா அதன் மீது போர் தொடுத்த விதத்தையும், உலகை அழிவின் வாசலுக்கு அழைத்துச் சென்ற நிகழ்வையும், அதிலிருந்து கம்பெனி நிர்வாகம் கற்கவேண்டிய உண்மைகளையும்!
1961. அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி கியூபா அதிபர் ‘ஃபிடல் காஸ்ட்ரோ’வை எப்படியாவது பதவியிலிருந்து தூக்கி எறியவேண்டும் என்று கடுப்பில் இருந்த சமயம். அந்நாட்டு உளவு அமைப்பு சிஐஏ மற்றும் போர் தளபதிகளுக்கும் அந்த எண்ணமே. அனைவரும் ஒரு மீட்டிங்கில் அமர்ந்து கோபமாய் பேசினால் என்ன ஆகும்?
அதுதான் ஆனது. கோபம் அறிவை மறைக்க, ஜனாதிபதி கூறியதை செய்யவேண்டிய கடமை கண்ணை மறைக்க, அதை செய்யவேண்டுமா என்று யோசிக்காமல் எப்படி செய்வது என்று மட்டுமே சிந்திக்கத் தொடங்கினர். கூடவே அமர்ந்து ப்ரெஷர் போட்டதால் கென்னடி சொன்னதை கண்ணடி படும்படி செய்வது என்று திட்டம் தீட்டினர்.
கியூபாவிலிருந்து வந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்தவர்களைக் கொண்டு தாக்குவது என்ற திட்டத்தை அளித்தனர். அதன்படி 1,400 பேர் கொண்ட படை கியூபாவில் Bahia de Cochinos என்ற இடத்தைத் தாக்கியது. ஸ்பானிஷ் மொழியில் அதற்கு பன்றிகளின் விரிகுடா என்று பொருள். வறட்டுப் பிடிவாதம், இருட்டு நேரம், திருட்டுத் தனமாய் வருவார்கள் என்று கணித்த கியூப படை அவர்களை விரட்டியடித்து புரட்டி போட்டது. 200 பேர் இறக்க, மற்றவர்கள் சரணடைந்தனர். Bay of Pigs Invasion என்று இந்நிகழ்வு அமெரிக்க வெளியுறவு துறையின் பெரும் தோல்விகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிற்காலத்தில் தடைநீக்கம் செய்யப்பட்ட சிஐஏ ஆவணங்கள் மூலம் தோல்விக்கான காரணங்கள் தெரிந்தன. பலமுறை கேட்டும் விமான தாக்குதலுக்கு சம்மதிக்காத கென்னடியின் செயலால் வந்த வினை என்று கூறியது சிஐஏ. காஸ்ட்ரோ பதவியிலிருந்து நீங்கவேண்டும் என்று காத்திருக்கும் கியூப மக்கள் போராட்டம் செய்வார்கள் என்று சிஐஏ போட்ட கணக்கு தவறு என்பது தெரிந்தது. கியூபா வீரத்துடன் போரிட்டால் தாக்குதல் நடத்துபவர்கள் அருகிலிருந்த மலைகளில் ஒளியலாம் என்ற கணிப்பு தவறானது என்பது புரிந்தது. தாக்குதல் நடந்த இடத்திலிருந்து மலைகள் 80 கி.மீ தள்ளி இருந்ததும் அதையடையும் வழி செல்லமுடியாத சேரும், சகதியும் நிறைந்தது என்பதை யாரும் கவனிக்காததும் தெரிந்தது. ஏகப்பட்ட குளறுபடிகள் நிறைந்த திட்டத்தை பகார்டி குடித்துவிட்டு சிகார் பிடித்தபடி தீட்டியிருப்பார்கள் போலும்!
இமாலய தவறு என்று தான் செய்ததை வர்ணித்த கென்னடி `எப்படி இத்தனை மடத்தனமாய் நடந்துகொண்டேன்’ என்று வருத்தப்பட்டாராம். குற்ற உணர்வுடன் பல நாட்கள் கடுப்பில் இருந்தாராம்.
இதுபோல் முடிவெடுப்பதில் ஏற்படும் தவறுகளை ஆராயும் ‘இர்விங் ஜானிஸ்’ என்னும் சமூக உளவியலாளர் குழுக்கள் எவ்வாறு சேர்ந்து தப்பான முடிவெடுக்கின்றன என்ற கோட்பாட்டை படைத்து அதற்கு காரணம் ‘குழு நினைப்பு’ (Group think) என்கிறார். குழுவாக சேர்ந்து முடிவெடுப்பவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டுமே என்று காட்டும் கவனத்தை சரியான முடிவெடுப்பதில் காட்ட தவறுவதே குழு நினைப்பு.
முடிவை பாதிக்கும் வெளிப்புற காரணிகளை கணக்கில் எடுக்காமல் அனைவரும் ஒருமித்த கருத்தோடு முடிவெடுக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கும் போது குழு நினைப்பு என்ற குழி தோண்டும் குதர்க்கம் அங்கு குடிகொண்டுவிட்டது என்று அர்த்தம். போதாதற்கு மீட்டிங்கில் சர்வாதிகார தலைவர் அமர்ந்து அவர் விரும்பும் முடிவும் தெரிந்தால் அனைவரும் அதைத் தானே ஆமோதிப்பார்கள்?
ஒருவேளை தப்பித் தவறி அனைவரும் எடுக்கும் முடிவுக்கு நேர் எதிரான கருத்து யாரிடமாவது தோன்றினால் அதை அனைவரும் சேர்ந்து எதிர்த்து தலைவர் கருத்தை அரண் போல் காக்க நினைப்பார்கள். அது அரண் அல்ல, ஆளையே அடித்துப்போட்டு அடக்கும் சிறைச்சாலை என்பதை அப்பொழுது யாரும் உணர்வதில்லை.
இதுவே அங்கு நடந்தது. கென்னடியின் ஆலோசகர் ‘ஆர்தர் ஷ்லெசிங்கர்’ தனிமையில் அவரிடம் கியூபாவை தாக்கும் திட்டம் தவறு என்று கூறினாலும் டீம் மீட்டிங்கில் தன் கருத்துகளை அழுத்தமாய் வாதாடவில்லை. அவரை மற்றவர்கள் பேச விட்டால் தானே. ஏன் இப்படி எதிர்க்கிறாய் என்று அட்டர்னி ஜெனரல் அவரை கடிந்துகொள்ள, அவர் பேச வாய் திறந்தபோதெல்லாம் மற்றவர்கள் அவர் வாயை அடக்க அதன் பிறகு ஆர்தர் மீட்டிங்கில் இருந்த பிஸ்கெட்டை சாப்பிடக் கூட வாயை திறக்கவில்லை!
தாக்குதல் நடத்துவோம் என்ற திட்டத்தை யார் எதிர்க்கிறார்களோ அவர்கள் கையை உயர்த்துங்கள் என்று கென்னடி மீட்டிங்கில் இருந்த அனைவரையும் கேட்டார். ஆர்தரை தவிர. அவர் கையை தூக்கி தொலைப்பாரோ என்ற பயத்தில். மற்றவர்கள் கையை உயர்த்த `ஆஹா ஒருமித்த கருத்து நிலவுகிறது. நாம் எடுத்த முடிவு சரியே’ என்று அனைவரும் தங்களையும் மற்றவர்களையும் ஒரு சேர ஏமாற்றிக்கொண்டனர்!
`மற்றவர் கருத்தை மதித்து அன்று ஏன் வாய் மூடி கிடந்தேன், இன்னமும் ஸ்ட்ராங்காக என் எதிர்ப்பை தெரிவித்திருந்தால் தவறான முடிவு எடுக்கப்பட்டிருக்காதே’ என்று பின்னாளில் பெரியதாக புலம்பினார் ஆர்தர். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல. கல்யாணம் பண்ணிய பிறகு பேச்சுலர் வாழ்க்கையை விரும்புவது போல!
குறுகிய எண்ணத்துடன், சார்புநிலை பார்வையோடு, அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்ற தவறான கண்ணோட்டத்தோடு தப்பான முடிவுகள் எடுப்பது தான் குழு நினைப்பு. `மனதின் செயல்திறனை செயலிழக்கவைத்து உண்மையை உறங்க வைத்து, தார்மீகத் தீர்ப்புகள் தப்பாகிப் போக காரணமாகும் குழு அழுத்தமே முடிவெடுப்பதில் நடக்கும் தவறுகளுக்கு காரணம் என்கிறார் ஜானிஸ். தலைவன் எண்ணப்படி மற்றவர் எண்ணத்தை மாற்றுகிறது. எதிர் கருத்துகளை கூட எதிரிக் கருத்துகளாய் பாவித்து அதை மற்றவர்கள் ஒதுக்க வைக்கிறது!
குழு நினைப்பை தவிர்க்க மாற்றுக் கருத்துகளை வரவேற்கும் குணம் வேண்டும். மற்றவர் கருத்துகளை கேட்பதற்கு முன் தலைவர்கள் தன் எண்ணங்களை பகிராமல் இருப்பது உசிதம். அனைவரும் கருத்துகளை வெளிப்படையாக கூறும் சுதந்திரத்தையும் மனம் திறந்து பேசும் சூழலை உருவாக்குவதும் அவசியம். எதிர் கருத்துகள் வரவேற்கப்படும், எதிர்ப்பவர்கள் எதிரிகள் போல் கருதப்படமாட்டார்கள் என்ற எண்ணம் வளர்க்கப்படவேண்டும். வரவேற்கப்படவேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்கையில் வெளியிலிருந்து விஷய ஞானிகளை வரவழைத்து சார்புநிலை இல்லாத அவர்கள் கருத்துகளைக் கேட்டறிவது புதிய கோணங்களில் பிரச்சினைகளைப் பார்க்க உதவும். தீர்வுக்கு வழி காட்டும்.
தன் தவறை திருத்திக்கொள்ள குழு நினைப்பு மீண்டும் நேராமல் பார்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கென்னடிக்கு அடுத்த ஆண்டே வாய்த்தது. உலகை அணு ஆயுத போரின் விளிம்பிற்கே கூட்டிச் சென்ற நிகழ்வின் மூலம். ரஷ்யா கியூபாவில் அணுஆயுத தளவாடங்களை நிறுத்தியது. அதுவும் பத்தாதென்று தளவாடங்களுடன் கப்பல்களை கியூபாவிற்கு அனுப்பியது. அமெரிக்க கடல் படை நடுக்கடலில் அக்கப்பல்களை மறித்தன. கியூபாவில் இருந்த தளவாடங்களை அப்புறப்படுத்த மிரட்டின. மூன்றாவது உலக யுத்தம் துவங்குமோ என்ற அபாயகராமான சூழல்.
குண்டு போடலாம், தளவாடங்களை அழிக்கலாம் என்று ஆலோசகர்கள் அறிவுரை கூற தன் முடிவு உலகின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகிறது என்பதை உணர்ந்தார் கென்னடி. சென்ற முறை செய்த தவறை செய்யாமலிருக்க மேலும் தகவல் பெறுவது, மாற்று கருத்துகளை வரவேற்பது, புதிய விதத்தில் தீர்வு காண்பது என்று முடிவு செய்தார். தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை கொண்ட குழு அமைத்தார். பிரச்சினைக்கு சுமூகமாய் தீர்க்கும் வழியை தருமாறு பணித்தார். அவர்களோடு அமர்ந்தால் தன் எண்ணங்கள் குழுவை சார்பு நிலைக்கு தள்ளும் என்று அவர்கள் மீட்டிங்கில் அமர்வதை தவிர்த்தார். அட்டர்னி ஜெனரலை அக்குழுவோடு அமர்ந்து அவர்கள் விவாதிக்கும் போது மாற்று கருத்து கொண்டு வாதாடும் Devil's Advocate ஆக இருக்கச் சொன்னார். என்ன ஆனது?
ரஷ்ய நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை, உலக நாடுகளின் அழுத்தம் ஒன்று சேர ரஷ்யா தளவாடங்களை அப்புறப்படுத்தியது. கியூபாவுக்கு எதிராக இனி படையெடுப்பதில்லை என்று அமெரிக்கா உறுதியளித்தது. உலகம் அணு ஆயுத அழிவிலிருந்து தப்பியது.
இனி குழுவோடு அமர்ந்து பகார்டி ஓபன் செய்யும்போதெல்லாம் குழு நினைப்பின் அவலங்களை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்!
satheeshkrishnamurthy@gmail.com