

ஏற்றுமதி மீதும், லாரி அல்லாத பிற வாகனங்கள் விற்பனையிலும் முக்கியத்துவம் தருவது அசோக் லேலண்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்று அந் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவுக்கு வெளியே நாங்கள் வேகமாக வளர்ந்து வருகிறோம். மத்திய கிழக்கு நாடுகள், வங்கதேசத்துக்கு எங்கள் நிறுவன தயாரிப்புகள் ஏற்றுமதி சிறப்பாக இருக்கிறது என்று சென்னையில் நடந்த நிறுவனத்தின் 65-வது பொதுக்கூட்டத்தில் அதன் நிர்வாக இயக்குநர் வினோத் கே தாசரி தெரிவித்தார்.
கடந்த வருடம் இலங்கையில் இருந்து பெரிய ஆர்டர்கள் வரவில்லை, ஆனால் இப்போது இலங்கை அரசிடமிருந்து நிறைய ஆர்டர்கள் வருவதாக தாசரி தெரிவித்தார்.
எங்கள் நிறுவன தயாரிப்புகள் ஏற்றுமதியும், லாரி அல்லாத பிற வாகனங்கள் விற்பனையும் வேகம் அடைந்துள்ளது. லாரி களில் செலவுகளை குறைத்து, குறைந்த விலையில் விற்றாலும் அதன் விற்பனையில் பெரிய முன்னேற்றம் இல்லை என்பதால், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.
தவிர பஸ்கள், பவர் சொல்யூஷன்ஸ், உதிரி பாகங்கள், பாதுகாப்புத்துறை வாகனங்கள் மற்றும் எல்சிவி ஆகிய ஐந்து பிரிவுகளில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.
கனரக வாகன விற்பனை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இப்போது நன்றாக இருக்கிறது என்றார். இதற்கு தென் இந்தியாவில் இருக்கும் எங்களது டீலர்கள் சிறப்பான பங்காற்றினார்கள் என்றார். இன்வெண்ட்ரியை மாற்றி அமைத்திருக்கிறோம். அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில் மீண்டு வருவோம் என்றார்.
இந்த வருடம் டிவிடெண்ட் கொடுக்காதது பற்றி கேட்டதற்கு, ஆமாம் இந்த வருடம் டிவிடெண்ட் கொடுக்கவில்லை. நிறுவனம் ஆரம்பித்ததிலிருந்து டிவிடெண்ட் கொடுக்காதது இதுதான் முதல்முறை என்றார்.
கடந்த ஜூன் மாத காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனம் 47.95 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தது. கடந்த வருடம் இதே காலாண்டிலும் இந்த நிறுவனம் 141.75 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தது. நஷ்டம் அடைந்திருப்பதால் பல வகைகளில் இந்த நிறுவனம் செலவுகளை குறைத்து வருகிறது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் 2.49 சதவீதம் சரிந்து 33.25 ரூபாயில் அசோக் லேலண்ட் பங்கின் வர்த்தகம் முடிந்தது.