ரூபாய் மதிப்பை தொட்டு தெரிந்துகொள்ளலாம்

ரூபாய் மதிப்பை தொட்டு தெரிந்துகொள்ளலாம்
Updated on
2 min read

மும்பையின் ஒர்லி பகுதியில், கடலை நோக்கிய தன்னுடைய அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு இடது கையில் ரூபாய் நோட்டை விரித்துவைத்து, வலது கை விரலால் அதைத் தடவி பார்த்து நோட்டின் நீள, அகலத்தை முதலில் அளந்துகொள்கிறார் நிர்மலா நிம்பால்கர்.

பிறகு அதில் ரூபாயின் மதிப்பைக் காட்டும் எண் அச்சிடப்பட்ட பகுதியைத் தேய்த்துப் பார்த்து, 'ஐந்நூறு' என்று அறிவிக்கிறார். நிர்மலா போன்ற மாற்றுத்திறனாளிகள் இப்போதுள்ள ரூபாய் நோட்டை அடையாளம் காண இந்த உத்தியைத்தான் பயன்படுத் துகின்றனர். ஆனால் இது எளிதானது அல்ல.

"பழக்கம் காரணமாக ரூபாய் எவ்வளவு என்று கண்டுபிடித்து விடுகிறோம். ஆனால் வேலை அதிகமாக இருக்கும்போதோ, எண்ண வேண்டிய நோட்டுகள் வெவ்வேறு மதிப்புகளிலும், அதிக எண்ணிக்கையிலும் இருக்கும் போதோ இப்படி தடவித்தடவி வேகமாக எண்ணிவிட முடியாது.

வாடிக்கையாளர்களோ, நாம் பணம் கொடுக்க வேண்டியவர் களோ அருகில் இருக்கும்போது பதற்றம் ஏற்படும். சந்திப்பவர்கள் புதிய வர்களோ, பழையவர்களோ - அவர்கள் தரும் நோட்டை அப்படியே வாங்கி, அவர்கள் சொல்லும் எண்ணிக்கையை நம்பி ஏற்றுக்கொண்டுவிடவும் முடியாது" என்கிறார் நிர்மலா நிம்பால்கர். கண்பார்வை யற்றவர்களுக்கான தேசிய சங்கத்தின் பிரெய்லி அச்சகத்தில் அவர் பணிபுரிகிறார்.

பார்வையற்றவர்களும் தடவிப்பார்த்து எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பிரெய்லி முறையில் எண்கள் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் இனி புழக்கத்துக்கு விடப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்த அறிவிப்பை வரவேற்கிறார் நிர்மலா. நிர்மலாவுக்கு ஒரு வயதாக இருந்தபோது அம்மை நோய் தாக்கி, பக்க விளைவாகக் கண்பார்வையை இழந்துவிட்டார்.

பிரெய்லி முறையில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டால் பார்வைத்திறன் அற்றவர்கள் எளிதில் அதைத் தொட்டு உணர்வார்கள். நேரமும் மிச்சப்படும். பார்வையற்றவர்கள் பலர் பெரு நகரங்களிலும் சிறு நகரங்களிலும் சிறு வியாபாரங்களிலும் சொந்தத் தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். வேகமாக வாடிக்கை யாளர்களைக் கவனிக்க நேரும்போது குழப்பத் திலும் தவறான அனுமானத்திலும் அவர்கள் நஷ்டப்படுகின்றனர்.

"ஆட்டோ டிரைவரிடமிருந்தும் கடைக்காரரிடமிருந்தும் ரூபாய் நோட்டுகளை வாங்கும்போதோ அவர்களுக்குத் தரும்போதோ ரூபாய் நோட்டுகளை மெதுவாகத் தடவிப் பார்த்துக்கொண்டிருந்தால், அவர்கள் பொறுமையிழந்து பேசுகின்றனர். எங்கள் மீது நம்பிக்கையில்லையா, நாங்கள் ஏமாற்றிவிடுவோமா என்று கேட்கின்றனர். இதனால் சில வேளைகளில் அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்று வாங்கிப் போட்டுக் கொள்வதுண்டு" என்கிறார் பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் தலைவர் கே. ராமன் சங்கர். இவருக்கு ஓரளவுதான் பார்வைத் திறன் உள்ளது.

50 லட்சம் பேர்

இந்தியாவில் பார்வைக் குறை வுள்ளவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்துக்கும் மேல். இப்போ துள்ள 10 பிரெய்லி அச்சகங்களின் திறனைக் கூட்டுவதுடன், புதிதாக 15 அச்சகங்களை நிறுவவும் அரசு முடிவு செய்திருக்கிறது.

"இந்தியாவில் பார்வைக் குறைவுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமிருந்தாலும் பிரெய்லி முறையில் எழுத, படிக்க கற்றவர்கள் மிகவும் குறைவுதான். பிறக்கும்போதே பார்வையை இழந்தவர்கள், சிறு வயதிலேயே பார்வையை இழந்தவர்கள்தான் பிரெய்லி முறையில் அதிகம் பரிச்சயம் உள்ளவர்கள்" என்கிறார் பார்வைக்குறைவுள்ளவர்களுக்கு உதவும் ராம் படாங்கர். ரூபாய் நோட்டில் பிரெய்லி எழுத்தில் அச்சிடுவதைப்போல நாணயங்களிலும் புடைப்பு வடிவில் எண்களை அச்சடிக்க வேண்டும் என்று அவர் கோருகிறார்.

சிறு குறை

பிரெய்லி முறையில் நோட்டு களை அச்சிட்டாலும் அந்த பிரெய்லி எழுத்துகள் சிறிது காலத்துக்குப் பிறகு தேய்ந்து விடும். அப்போது தடவித்தான் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.

இப்போதுள்ள வசதி

இப்போதுள்ள ரூபாய் நோட்டுகளிலும் அதன் மதிப்பு முன் பக்கத்தில் இடது மேல் புறத்திலும் நடுவிலும் இன்டாக்ளியோ முறையில் புடைப்பெழுத்தாக அச்சிடப்பட்டுள்ளன. இதைத்தான் தடவிப்பார்த்து ரூபாயின் மதிப்பைத் தெரிந்து கொள்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in