Jio AirFiber - சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் அறிமுகம் | சந்தா விவரம்

Jio AirFiber - சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் அறிமுகம் | சந்தா விவரம்
Updated on
1 min read

சென்னை: சென்னை உள்பட 8 பகுதிகளுடன் இந்தியச் சந்தையில் ஜியோ நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஜியோ ஏர்ஃபைபரை அறிமுகம் செய்துள்ளது. இதன் சந்தா விவரங்கள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் கடந்த 2016-ல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது ஜியோ டெலிகாம் சேவைகள். அதுவரை டாக்டைம், மெசேஜ், இன்டர்நெட் என மொபைல்போன் பயனர்கள் தனித்தனியே ரீசார்ஜ் செய்ய வேண்டி இருந்தது. இந்தச் சூழலில் இதை அனைத்தையும் ஒரே பிளானாக இணைத்து அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் என வழங்கியது ஜியோ. அதன் மூலம் இந்திய டெலிகாம் சந்தையில் புரட்சி ஏற்படுத்தியது. தற்போது ஏர்ஃபைபரை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பாயின்ட்-டு-பாயின்ட் ரேடியோ லிங்க் மூலம் ஏர்ஃபைபர் இயங்குகிறது. இதற்கு வயர்லெஸ் சிக்னல்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட், பிராட்பேண்ட், ஸ்மார்ட் ஹோம் சர்வீஸ் போன்றவற்றை பயனர்களுக்கு இது வழங்குகிறது. WiFi router, 4கே ஸ்மார்ட் செட்-டாப்-பாக்ஸ், ரிமோட் இதனுடன் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தங்கள் சந்தை விரிவு காணும் என ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

சென்னை, அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மும்பை மற்றும் புனே என 8 நகரங்களில் ஏர்ஃபைர் சேவை பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் முதல் இதன் இன்ஸ்டாலேஷன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு முன்னணி ஓடிடி நிறுவனங்களின் சேவையையும் பயனர்கள் பெற முடியும். பயனர்கள் செலுத்தும் சந்தாவுக்கு ஏற்ப அது மாறுபடுகிறது. இதனை பெற விரும்பும் பயனர்கள் 60008 60008 என்ற எண்ணை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம், www.jio.com என்ற வலைதளம் அல்லது அருகில் உள்ள ஜியோ ஸ்டோரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்ஃபைர் மற்றும் ஏர்ஃபைர் மேக்ஸ் என இரண்டு பிரிவுகளில் பிளான்களை பயனர்களுக்கு ஜியோ வழங்குகிறது. ரூ.599 முதல் தொடங்கும் ஜியோ ஏர்ஃபைர் சந்தா ரூ.3,999 வரை என ஆறு விதமான சந்தா கட்டண பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணைய இணைப்பின் வேகம் மற்றும் ஓடிடி தளங்களின் அக்சஸ் பயனர்கள் செலுத்தும் சந்தாவுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in