

புதுடெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மாதம் 6.86% சரிந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் இதனைத் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 34.48 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 37.02 பில்லியன் டாலராக இருந்தது. ஒப்பீட்டளவில் இந்த ஆண்டு 6.86% ஏற்றுமதி சரிந்துள்ளது.
இதேபோல், இறக்குமதியும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் இறக்குமதி மதிப்பு 61.88 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த மாதத்தில் 58.64 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறை 24.16 பில்லியன் டாலராக உள்ளது.
கடந்த 7 மாதங்களாக இந்தியாவின் ஏற்றுமதி ஒவ்வொரு மாதமும் அதற்கு முந்தைய மாதத்தைவிட குறைந்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி அளவு 6% உயர்ந்தாலும், கடந்த ஆண்டை விட விலை 27% குறைந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையிலான ஏற்றுமதியில் பாதி சரிவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.