

குன்னூர்: தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க 130-வது மாநாடு, நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள உபாசி அரங்கில் நடைபெற்றது. உபாசி தலைவர் ஜெப்ரி ரேபெல்லோ வரவேற்றார்.
மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூடுதல் செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா பேசும்போது, "காபி மற்றும் தேயிலை உற்பத்தியாளர்கள், தங்கள் தயாரிப்புகளில் புதுமைகளை புகுத்த வேண்டும். சர்வதேச சந்தையை மற்றவர்கள் ஆக்கிரமிப்பதற்காக உற்பத்தியாளர்கள் விட்டுக் கொடுக்காமல் இருப்பதும், அதே சமயம் உள்நாட்டு சந்தைகளுக்கான தயாரிப்புகளின் தரத்தில் சமரசம் செய்யாமல் இருப்பதும் முக்கியம்" என்றார்.
சிறப்பு விருந்தினரான கர்நாடக மாநில மாற்றத்துக்கான நிறுவனத்தின் துணைத் தலைவர் எம்.வி.ராஜீவ் கவுடா, "நுகர்வோரின் மனதில் பிராண்டை நிறுவ வேண்டும். கொலம்பியா காபி எவ்வாறு பிராண்ட் ஏற்படுத்தப்பட்டு, உலகம் முழுவதும் விற்கப்பட்டது. தென்னிந்தியாவில் இருந்து இந்த பிராண்டுகளை விரிவுபடுத்த, அரசின் உதவியுடன் தயாரிப்புகளின் மூலத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். இது போன்ற முயற்சிகள், இந்தியாவில் வளரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு தேனீர் மற்றும் காபி குடிப்பதை ஆர்வமாக மாற்றும்" என்றார்.
இதைத்தொடர்ந்து, 15-வது தங்க இலை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய வர்த்தக தொழில் துறை கூடுதல் செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதில், கோடநாடு எஸ்டேட்டுக்கு ஆர்தோடக்ஸ் தேயிலை தூள் உற்பத்தி பிரிவில் லீப், டஸ்ட், பேனிக்ஸ் ஆகிய 3 வகைகளில் 3 தங்க இலை விருதுகளை, எஸ்டேட் மேலாளர் நடராஜன் பெற்றுக் கொண்டார்.
சிடிசி தேயிலை தூள் பிரிவில் கிரீன் டீ எஸ்டேட்டுக்கு லீப், டஸ்ட், பேனிக்ஸ் ஆகிய 3 பிரிவுகளில் 3 தங்க தேயிலை விருதுகளை, எஸ்டேட் மேலாளர் பழனி குமார் பெற்றுக்கொண்டார்.