விலை வீழ்ச்சியால் வீதிக்கு வந்த தக்காளி - மதுரை வியாபாரிகள் கூவிக் கூவி விற்பனை

மதுரை கருப்பாயூரணி சாலையில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து விற்கப்படும் தக்காளி
மதுரை கருப்பாயூரணி சாலையில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து விற்கப்படும் தக்காளி
Updated on
1 min read

மதுரை: விலை வீழ்ச்சியால் கடந்த மாதம் கிலோ ரூ.150 முதல் ரூ.200-க்கு விற்ற தக்காளி தற்போது வீதி, தெருக்கள் தோறும் கூவி கூவி குறைந்த விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமையலில் வெங்காயத்தைப் போல் தக்காளி முக்கியமானது. பற்றாக்குறை, உற்பத்தி மிகுதியால் சந்தையில் அதன் விலை நிலையற்றதாக உள்ளது. கடந்த மாதம் மழை சேதத்தால் உற்பத்தி குறைந்து தக்காளி விலை கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை சென்றது. தமிழக வியாபாரிகள், ஆந்திரா, கர்நாடகா மட்டுமில்லாது ஒடிசாவுக்கு தக்காளியை கொள்முதல் செய்ய படையெடுத்தனர்.

வெங்காயம் பற்றாக்குறை ஏற்பட்டால் அதனை வட மாநிலங்களில் இருந்து டன் கணக்கில் கொள்முதல் செய்து விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும். ஆனால், தக்காளியைப் பொருத்தவரையில் ஒட்டுமொத்த நாடே தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா போன்ற தென் மாநிலங்களை நம்பியிருக்கிறது.

அதனால் தக்காளி உற்பத்தியில் ஏற்ற, இறக்கங்கள் நிகழ்ந்தால் அதன் விலையில் நிச்சயமற்ற தன்மை ஏற்படுகிறது. விலை கூடுகிறது என்று அடுத்த சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்தில் தக்காளி பயிரிட்டால் அறுவடை செய்யும் போது இழப்பைச் சந்திக்கின்றனர். அதனால், தக்காளியை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்ய முடியவில்லை.

இந்நிலையில், மதுரையில் சில நாட்களாக தக்காளி விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. 15 கிலோ கொண்ட பெட்டி ரூ.100 முதல் ரூ.200 வரை மட்டுமே விற்கிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கிறது. அதனால், தக்காளி வியாபாரிகள் வீதி, தெருக்கள் தோறும் சென்று கூவி கூவி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சந்தைகளில் விலை கிடைக்காத தக்காளியை விவசாயிகள் குப்பைத் தொட்டிகளில் கொட்டிச் செல்லும் அவலமும் நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in