ஜி20 மாநாட்டின் தாக்கத்தால் 20,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்த நிஃப்டி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தி காட்டியதன் எதிரொலியாக நேற்று நடைபெற்ற பங்கு வர்த்தகம் மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.

முதலீட்டாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நிஃப்டி குறியீட்டெண் வர்த்தகத்தின் இடையே முதன்முறையாக 20,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. இதுகுறித்து பங்குச் சந்தை வட்டாரங்கள் கூறுகையில், "ஜி20 மாநாட்டில் இந்தியா ராஜ்ஜீய ரீதியில் உருவாக்கிய டெல்லி பிரகடனம் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், பணவீக்கம் குறைந்து வருவது, காய்கறி விலையில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை வளர்ச்சிக்கு சாதகமான அம்சங்களாக பார்க்கப்படுகின்றன" என்றனர்.

பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வங்கி துறையைச் சேர்ந்த பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது. நிஃப்டி பட்டியலில் அதானி போர்ட்ஸ் பங்குகளின் விலை 7 சதவீதம் வரை முன்னேற்றம் கண்டது. குறிப்பாக, மீடியா தவிர்த்து பெரும்பாலான துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.

நிஃப்டி பேங்க், ஃபின் நிஃப்டி, நிஃப்டி எப்எம்சிஜி, நிஃப்டி ஐடி மற்றும் நிஃப்டி ஆட்டோ குறியீடு கள் 1 சதவீதம் முதல் 1.7 சதவீதம் ஏற்றம் கண்டன. நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 528 புள்ளிகள் உயர்ந்து 67,127-ல் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 176 புள்ளிகள் உயர்ந்து 19,996 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே நிஃப்டி அதிகபட்சமாக 20,008 வரை சென்று முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த ஏற்ற நிலை தொடரும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in