

ரயில்வேத்துறையில் லாபமீட்டும் சில கட்டுமான நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இந்த நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். அத்துடன் அரசுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும் என்று அரசு கருதுகிறது. இந்திய ரயில்வேத்துறை நிர்வகிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக ரயில்வே வாரியம் பேச்சு நடத்தி வருவதாக அரசு அதிகாரி தெரிவித்தார்.
இந்திய ரயில்வேத்துறையின் கீழ் 6-க்கும் மேற்பட்ட அதாவது ரிட்ஸ், இர்கான், ஐஆர்எப்சி, ஐஆர்சிடிசி, ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் இதுவரை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை. இவை அனைத்தும் பொதுப் பங்கு வெளியீடு மூலம் பங்குச் சந்தையில் நுழையவும், அதேசமயம் அரசு வசம் உள்ள பங்குகளை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேத்துறை நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நிதி ஆதாரத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு வழிகள் ஆராயப்படுகின்றன. ரயில்வேத்துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது மற்றும் தனியார் பங்கேற்போடு திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்ட வழிகளில் நிதி ஆதாரத்தை அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ. 43,425 கோடி தொகையை அரசு நிறுவன பங்கு விலக்கல் மூலம் திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இப்போதைக்கு செயில், என்ஹெச்பிசி, ஓஎன்ஜிசி, ஆர்இசி மற்றும் பிஎப்சி ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.