Published : 07 Dec 2017 10:16 AM
Last Updated : 07 Dec 2017 10:16 AM

விளைபொருட்களை உரிய விலையில் சந்தைப்படுத்த 10 மாவட்டங்களில் ரூ.368 கோடியில் டெர்மினல் மார்க்கெட்டுகள்: நபார்டு வங்கி தலைமை பொதுமேலாளர் தகவல்

விளைபொருட்களை உரிய விலையில் சந்தைப்படுத்த நபார்டு வங்கி நிதியுதவியில் ரூ.368 கோடியில் 10 மாவட்டங்களில் டெர்மினல் மார்க்கெட்டுகளை தமிழக அரசு தொடங்க உள்ளதாக நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட நபார்டு வங்கி தலைமை பொதுமேலாளர் (தமிழ்நாடு, புதுச்சேரி) எஸ்.நாகூர் அலி ஜின்னா கூறியதாவது:

வேளாண் வளர்ச்சிக்காக தண்ணீர் பாதுகாப்பை மையப்படுத்தி தமிழகத்தில் 41,000 ஏரி, குளம் குட்டைகளை தூர்வாரி பலப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ரூ.3,000 கோடி தேவைப்படும். ஊரக வளர்ச்சிக்கான நிதி அடிப்படையில் ஆண்டுதோறும் தலா ரூ.500 கோடி வழங்க மாநில அரசிடம் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

சொட்டுநீர், நுன்னீர் பாசன முறைகள், நீர் சேமிப்புக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், தடுப்பணைகள் அமைத்தல் போன்றவற்றின் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முடியும். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். நீர் மேலாண்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக 4,400 கிராமங்களில் நீர்த் தூதர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர். மழையை சேமிப்பது, அதை பயனுள்ள வகையில் விவசாயத்துக்கு பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து தன்னார்வலர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

விவசாயிகள் கந்துவட்டி போன்ற நிதிப் பிரச்சினைகளில் உள்ளாகாமல் இருக்க, ரூபே கிஷான் டெபிட் கார்டுகள் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. 7சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயக் கடன் வழங்கப்படும். விவசாயிகளிடம் உள்ள நிலம், பயிர் ஆகியவற்றைப் பொறுத்து இந்த கடன் வழங்கப்படும்.

விளைபொருட்களை உரிய விலையில் சந்தைப்படுத்துவது விவசாயிகளுக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.368 கோடியில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக 10 மாவட்டங்களில் பதப்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட டெர்மினல் மார்க்கெட்டுகள் தொடங்கப்பட உள்ளது.

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் 32 சந்தைகள் நவீனப்படுத்தப்பட உள்ளன. எலக்ட்ரானிக் நேஷனல் அக்ரிகல்சுரல் மார்க்கெட் (இ - நாம்) திட்டத்தில் சரியான எடை, சிறந்த விலை, விற்பனை செய்த உடனே விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும், விளை பொருட்களையும் பதப்படுத்தி விற்பனை செய்ய முடியும். இந்த திட்டத்துக்கு நபார்டு வங்கி மூலம் நடப்பாண்டில் ரூ.200 கோடி கொடுக்க உள்ளோம்.

காய்கறி, பழங்கள் உற்பத்தியாகும் பகுதிகளில், மாநில அரசுடன் இணைந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் திட்டத்துக்கும் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 கோடி அளவில் அதற்கு நிதி அளிக்கத் தயாராக உள்ளோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தண்ணீர் மிகப்பெரிய தேவையாக உள்ளது. தாமிரபரணியை தவிர ஜீவநதி எதும் இல்லை. 85 சதவீத நிலத்தடி நீர் வற்றிவிட்டது. 90 சதவீத நீர் நிலைகளும் மாசுபட்டு விட்டன. மழை கிடைத்தாலும் சேமிப்பதில்லை. கழிவுநீரை சேமிப்பது, நீரை சேமிப்பது, மேலாண்மை செய்வது போன்றவற்றுக்கான முக்கியத் திட்டம் குறித்து தமிழக அரசு கூட்டம் நடத்த உள்ளது. அதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x