

கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் பாக்ஸ்-ஆஃபிஸில் வசூலை அள்ளி வரும் நிலையில் படத்தில் நடித்த ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு காசோலை மற்றும் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளது படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
முதலில் படத்தின் நாயகன் ரஜினிகாந்துக்கு காசோலை மற்றும் BMW X7 காரை அன்புப் பரிசாக வழங்கினார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். தொடர்ந்து இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு காசோலை மற்றும் Porsche நிறுவன காரை பரிசாக வழங்கினார். தமன்னா மற்றும் வில்லனாக நடித்த விநாயகனுக்கு கார் வழங்க வேண்டும் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட BMW X7 மற்றும் Porsche காரின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
BMW X7: ஜெர்மன் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது பிஎம்டபிள்யூ நிறுவனம். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட நிறுவனம். முதலில் விமான என்ஜின்களை தயாரித்தது. பின்னர் கார் மற்றும் மோட்டார் சைக்கிளை தயாரித்து உலக அளவில் விற்பனை செய்து வருகிறது. பல்வேறு சீரிஸ்களில் இந்நிறுவனம் கார்களை தயாரித்து வருகிறது. அதில் எக்ஸ் சீரிஸ் ஒன்று. தற்போது ரஜினிகாந்துக்கு இந்த எக்ஸ் சீரிஸில் ஒன்றாக எக்ஸ்7 கார் தான் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 முதல் இந்த கார் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எஸ்யூவி ரக கார் இது. 2018-ல் இந்த காரின் உற்பத்தி தொடங்கியது. தமிழகத்தின் சென்னையில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினை இந்த கார் கொண்டுள்ளது. நடப்பு ஆண்டில் xDrive40i, M60i வேரியண்ட் பெட்ரோல் என்ஜினில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Porsche: இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு Porsche நிறுவன கார் வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதன் மாடல் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் Porsche சென்டர் சென்னை தரப்பில் அதன் மாடல் என்ன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Porsche Macan ரக கார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் காம்பெக்ட் ரக கார் ஆகும். கடந்த 2014-ல் இந்த காரின் உற்பத்தி தொடங்கியது. Macan, Macan S, Macan GTS, Macan Turbo என நான்கு வேரியண்ட்களில் இந்த கார் வெளிவருகிறது. இதில் Macan S வேரியண்ட் கார் நெல்சன் மற்றும் அனிருத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.