Published : 19 Jul 2014 10:00 AM
Last Updated : 19 Jul 2014 10:00 AM

ஒவ்வொரு துளியிலும் துல்லியமாய் தெரியணும்

ஐயா மார்க்கெட்டரே! ஒன்று சொல்வேன், செய்வீர்களா? உங்க நல்லதுக்குத்தான். ஒரு பெரிய சுத்திய எடுங்க. மனதை திடப்படுத்திக்குங்க. உங்க பிராண்டை தரையில வையுங்க. சுத்தியால ஒரே போடா போடுங்க.

அட, உங்க நல்லதுக்குத்தான். என்னை நம்புங்க. வேணும்னா உங்க மனைவியை நினைச்சுக்கிட்டு ஒரு போடு போடுங்க.

ஆங், அப்படித்தான். மனைவி மேலதான் உங்களுக்கு எவ்வளவு ஆசை சார்! சரி, பிராண்டு தூள் தூளா போச்சா?

குட். அதிலேருந்து ஒரு பகுதிய எடுங்க. அதை வாடிக்கையாளருக்கு காமிங்க. அந்த பீஸ் எந்த பிராண்டுடையதுன்னு அவரால சொல்ல முடியுதா?

முடியவில்லை என்றால் நீங்கள் பிராண்டிங் சரியாக செய்யவில்லை என்று அர்த்தம். அதே சுத்தியை உங்கள் தவறில் போட வேண்டும். பிராண்டிங் சூட்சமத்தை இன்னும் கூட தெளிவாக சொல்ல வேண்டும். முதல்ல சுத்திய கீழ வையுங்க. பயமா இருக்கு!

பிராண்ட் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. அது பயன்களின் கலவை. ஆதார அம்சங்களின் அணிவகுப்பு. அதன் ஒவ்வொரு அம்சமும் தனித்துவமாய் தெரிய வேண்டும். அப்பொழுதுதான் பிராண்டே தனித்துவமாய் தெரியும்.

போட்டி நிறைந்த உலகில் வாடிக்கையாளர் கவனத்தைக் கவர பிரம்ம பிரயத்தனப்பட வேண்டி யிருக்கிறது. பிராண்டின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரித்து, பக்குவமாகச் செதுக்கி, வித்தியா சப்படுத்தி கோர்வையாய் கோற்றால்தான் பிராண்ட் என்னும் பூமாலை கிடைக்கும். வாடிக்கையாளர் கண்ணில் பளீரென்று படும்.

தரமாய் பிராண்ட் செய்து, பெயர் வைத்து, விளம்பரம் செய்தால் போதும் என்றுதான் பலர் நினைக்கிறார்கள். பிராண்டின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அடையாளம் கொடுத்து அதைத் தனியாய் பிரித்தெடுத்தாலும் தனித்துவமாய் தெரிய வேண்டும் என்கிறார்’ மார்ட்டின் லிண்ட்ஸ்ட்ராம்’. ‘பிராண்ட்சென்ஸ்’ என்கிற தன் புத்தகத்தில் ‘ஸ்மேஷ் யுவர் பிராண்ட்’ என்று மார்க்கெட்டர்களுக்கு அறிவுறுத்துகிறார். பிராண்டை ஒரு போடு போட்டு, பிரித்து மேய்ந்து, ஒவ்வொரு அம்சமும் தனித்துவமாய் தெரிகிறதா என்று பார்க்கச் சொல்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் வெளிவராத இசையின் ஒரு பகுதியை மட்டும் போட்டுக் காட்டுங்கள். கேட்பவர் ‘ஆஹா இது ராஜா சார் மியூசிக்’ என்பார். மெலடி, கர்னாடிக், வெஸ்டர்ன், கிராமியம், குத்து என்று எந்தப் பிரிவானாலும், எத்தனை புதுமையுடன் கம்போஸ் செய்தாலும் அதில் தன் சிக்னேச்சர் பேடர்ன், ஸ்டைலோடு, கன்சிஸ்டென்டாய் இசையமைத்து வருபவர் ராஜா. பலர் இசையை சுக்குநூறாய் உடைத்துக் கொண்டிருக்க, இளையராஜா இசையின் ஒவ்வொரு பிட்டும் அவர் பெயர் சொல்லும். அன்றும், இன்றும், என்றும் அவர் ஏன் ராஜா என்பதன் ரகசியம் புரியும்!

அதுபோல் பிராண்டின் ஒவ்வொரு அம்சமும், பிரிவும் வித்தியாசமாக, தனித்துவமாகத் தெரிய வேண்டும். ஒவ்வொன்றும் பிராண்டின் பெயர் சொல்லவேண்டும். பிராண்ட்லோகோவை பார்த்தால்தான் இன்ன பிராண்ட் என்று கூற முடியும் என்றில்லாமல் பிராண்டின் எந்தப் பிரிவைப் பார்த்தாலும் பிராண்ட்பெயர் பளிச்சென்று தெரியவேண்டும்.

பிராண்ட் கலர்

பிராண்டை பார்த்தால் கண்ணில் முதலில் படுவது கலர். பொருத்தமான கலரைத் தேர்வு செய்து பிராண்ட் அதை தனதாக்கவேண்டும். பெட்டிக் கடை போர்டில் ஓரக்கண்ணில் ப்ளூ என்றால் ‘பெப்சி’, ரெட் என்றால் ‘கோக்’ என்று பார்க்காமலே தெரிகிறதே. இந்த பிராண்டுகள் இரண்டு கலர்களையும் ஸ்வீகாரம் எடுத்துவிட்டன. ‘எல்லோ பேஜஸ்’ தன் பெயரிலேயே கலரை சேர்த்துவிட்டது. ‘எகனாமிக் டைம்ஸ்’ பேப்பரை சுக்கு நூறாய் கிழித்தாலும் அது எந்த பேப்பர் என்று தெரிகிறதே!

பிராண்ட் ஷேப்

உசிலைமணி என்றாலே அவர் உருவம்தான் நம் நினைவுக்கு வரும். பிராண்ட்ஷேப்பும் அவ்வாறே. 1915ல் ‘ரூட் க்ளாஸ் கம்பெனி’யின் ’ஏர்ல் டீன்’ என்பவரிடம் இருட்டிலும், பாட்டில் உடைந்து ஒரு பகுதியை பார்த்தாலும் கூட இது இன்ன பிராண்ட் என்று தெரியும்படி குளிர்பான பாட்டில் வடிவமைக்க சொல்லப்பட்டது. அவர் வடித்த பாட்டில்தான் இன்று உலகின் நம்பர் ஒன் பிராண்டான ‘கோகோ கோலா’!

ஆக்சிடெண்டில் உருத்தெரியாமல் நசுங்கினாலும் ஆட்டோ க்ளியராய் தெரியும். சீமை சரக்கு குடிப்பவர்கள் போதையில் இருந்தாலும், கண்கள் கட்டப்பட்டிருந்தாலும் கொடுத்த பாட்டில் ‘அப்சலுட் வோட்கா, ‘ஜானி வாக்கர்’ என்று சரியாய் சொல்வார்கள். பாட்டிலை கன்னத்தோடு இழைத்து ‘என்னை விட்டு எங்கடி போயிருந்த’ என்று கொஞ்சுவார்கள். அந்த பாட்டில்களின் தனித்துவமான ஷேப் அப்படி!

பிராண்ட் பெயர்

ஸ்மார்ட் கம்பெனிகள் தங்கள் பிராண்டுகளுக்கு, பொருட்களுக்கு பெயர் வைக்கும் முறையிலேயே இது இன்னாருடையது என்று தெரியும்படி வைப்பார்கள்.

‘மெக்டானல்ட்ஸ்’ Mcசிக்கன், Mcநக்கட்ஸ் என்று தங்கள் ஐட்டங்களுக்கு Mc என்று ஆரம்பிக்கும்படி பெயர் வைப்பார்கள். டைரக்டர் விசு இந்த உத்தியை கடைபிடித்து ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘திருமதி ஒரு வெகுமதி’, ‘காவலன் அவன் கோவலன்’ என்று ஒரே ஜாதியில் பெயர் வைத்து வெற்றி பெற்றது தெரிந்ததே!

பிராண்ட் வார்த்தைகள்

பிராண்ட் தன் பிரத்யேக வார்த்தை களை கன்சிஸ்டண்டாக பேக்கில், விளம்பரங்களில் உபயோகித்தால் அதைக் கேட்டாலே இது இந்த பிராண்டுடையது என்று தெரிந்துவிடும். ‘பேஷ், நன்னா இருக்கு’ என்ற வார்த்தைகளை கேட்டால் ‘நரசூஸ் காபி’. ‘ஆனந்தம்’ என்ற வார்த்தையை கேட்டால் ‘ப்ரூ’. ‘கொண்டாட்டம்’ என்றாலே ‘கே டீவி’ தான். ‘என்னை வாழ வைத்த தெய்வங்களே’ என்று ஒரு நடிகர் கூறக்கேட்டால் அவர் யாரென்பது சூப்பராய் சின்னக் குழந்தைக்கும் தெரியுமே!

பிராண்ட் ஐகன்ஸ்

பிராண்ட் உபயோகிக்கும் ஐகன்களும் பிராண்ட் பெயரைக் கூறவேண்டும். ஐஸ் கட்டிகளிலிருந்து பவுடர் டப்பா மேலெழுந்து வந்தால் அது ‘டர்மிகூல்’. குழந்தையின் முதுகில் முள் குத்தும் படம் இருந்தால் ‘நைசில்’.

பிராண்ட் ஓசைகள்

மனதில் ரீங்காரமிட்டு நினைவை விட்டு அகலாது இசை. சில பிராண்டுகள் மட்டுமே தங்களுக்கென்று பிரத்யேக ஓசையை பேணிப் பாதுகாத்து வளர்க்கின்றன. ‘நோக்கியா’ ஃபோனை ஆன் செய்தால் கேட்கும் இசை ஆகட்டும், ‘இண்டெல்’ விளம்பரங்களில் கேட்கும் ஒலி ஆகட்டும் பிரத்யேகமானவை. உடைத்தாலும் இந்த பிராண்டுகள் தெளிவாய் தெரியக்கூடியவை.

பிராண்ட் பாரம்பரியம்

தமிழனுக்கு மட்டுமல்ல, பிராண்டுக்கும் பாரம்பரியம் உண்டு. ‘ஆடித் தள்ளுபடி’ ஜவுளிக் கடைகளின் பாரம்பரியம் என்றாலும் ஆடியை வேண்டுமானால் தள்ளுபடி செய்வோம், ஆடித் தள்ளுபடி அளிக்கமாட்டோம் என்று ரிவர்ஸ் பாரம்பரியம் செய்து தனியாய் தெரிகிறது ‘நல்லி சில்க்ஸ்’. ‘நியூ இயர் சேல்’ தரும் எலக்ட்ரானிக்ஸ் கடை எது என்று சொல்லவும் வேண்டுமோ? ‘95 பைசா’ என்று முடியும் விலைகளை நிர்ணயித்த பிராண்ட் எது என்பதுதான் தெரியாதா!

எத்தனை உடைத்தாலும் பிராண்டின் ஒவ்வொரு பிரிவும் அம்சமும் அதன் பெயரை தெளிவாய் சொல்லவேண்டும். அதோடு உங்கள் போட்டியாளர்கள் பிராண்டையும் பிரித்து மேயுங்கள். அந்த பிராண்டுகளுடன் உங்கள் பிராண்டை ஒப்பிட்டுப் பாருங்கள்.

லிண்ட்ஸ்ட்ராம் சொன்ன ‘சுத்தி டெஸ்ட்’ புரிந்ததா? இதில் பாஸ் செய்தால் உங்கள் பிராண்ட் சாட்சாத் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

சுத்தி சுத்தி அடிக்கும்!

satheeshkrishnamurthy@gmail.comSign up to receive our newsletter in your inbox every day!

 
x