Published : 31 Dec 2017 10:42 AM
Last Updated : 31 Dec 2017 10:42 AM

தனியாரால் ஏர் இந்தியா சிறப்பாக நிர்வகிக்கப்படும்: மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கருத்து

மத்திய அரசை விட தனியாரால் ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பாக நிர்வகிக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்க முடிவெடுத்துள்ளது. அதனையொட்டி ஜெயந்த் சின்ஹா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் கலந்து கொண்ட ஜெயந்த் சின்ஹா கூறியதாவது: ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் விடுவதற்கான பணிகள் அடுத்த எட்டு மாதங்களில் நிறைவடையும். அதாவது யார் ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் எடுக்கப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். சர்வதேச அளவில் இயங்கும் மிகக் முக்கிய பொதுத்துறை விமான நிறுவனங்களான லூப்தான்சா, பிரிட்டீஷ் ஏர்வேஸ் மற்றும் குவாண்டாஸ் நிறுவனங்கள் அனைத்தும் அந்தந்த அரசுகளால் தனியார்மயமாக்கம் செய்யப்பட்டவைதான். அந்த நிறுவனங்கள் தற்போது தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றன. அரசு நிர்வகித்ததை விட தனியாரால் இந்த நிறுவனங்கள் நல்லமுறையில் நிர்வகிக்கப்படுகின்றன. அதனால்தான் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் உத்தியை மதிய அரசு எடுத்துள்ளது.

நல்ல ஏலதாரர்கள் நிச்சயமாக முன்வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கம் செய்த பிறகு ஆரம்பகாலத்தில் சிறப்பாக செயல்பட்டது போல் நிறுவனம் இயங்கும். அடுத்த 6 முதல் 8 மாதங்களில் ஏலதாரர் முடிவுசெய்யப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த 3ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகள் மேம்பட்டு வருகிறது. தற்போது செயல்பாட்டு லாபத்தில் இயங்கி வருகிறது.

செப்டம்பர் மாத தகவல்படி, ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ.51,890 கோடியாக உள்ளது. இந்தக் கடனுக்கான ஆண்டு வட்டி மட்டும் ரூ.5,000 கோடியாக உள்ளது. நிகர லாபத்தின் படி கணக்கிட்டால் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை மோசமாக உள்ளது. ஏர் இந்தியா தனியார்மயமாக்கும் ஏலத்தில் வெற்றியடையும் ஏலதாரர் அதிக முதலீடு செய்து சேவைகளை மேம்படுத்தினால் நிச்சயமாக மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் என்று ஜெயந்த் சின்ஹா கூறினார்.

கடந்த ஜூன் 28-ம் தேதி பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க ஒப்புதலை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x