Published : 14 Dec 2017 10:55 AM
Last Updated : 14 Dec 2017 10:55 AM

2022-ம் ஆண்டில் புதிதாக உருவாகும் வேலைகளில் 9 சதவீதம் பேருக்கு பணி வாய்ப்பு

இந்தியாவின் பணிச்சூழல் மாறுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. வரும் 2022-ம் ஆண்டு வேலை செய்பவர்களின் 9 சதவீதத்தினர் தற்போது இல்லாத புதிய வேலைகளில் இருப்பார்கள் என ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது. அதாவது தொழில் நுட்ப மாற்றத்தால் புதிய வேலைகள் உருவாகும் என ஃபிக்கி, நாஸ்காம் மற்றும் எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனங்கள் கூட்டாக நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்த நிறுவனங்கள் மேலும் கூறியிருப்பதாவது:

அடுத்த இரு ஆண்டுகளில் புதிய வேலைகள் உருவாவதில் மந்த நிலை இருக்கும். இந்த இரு ஆண்டுகளில் நிறுவனங்கள் தங்களை மறுசீரமைப்பு செய்துகொள்ளும். வரும் 2022-ம் ஆண்டு வேலை வாய்ப்புகள் முழுமையாக மாறி இருக்கும். உலகமயமாக்கல், பணியாளர்களின் வயது, தொழில் நுட்பம் ஆகிய காரணங்களால் 2022-ம் ஆண்டு பெரிய மாற்றம் இருக்கும். தற்போது இல்லாத வேலைகளில் 9 சதவீத பணியாளர்கள் பணிபுரிவார்கள். 37 சதவீத பணியாளர்களின் வேலையில் பெரிய மாற்றம் நடந்திருக்கும். 21 சதவீத பணியாளர்களின் வேலையில் நிச்சயமற்ற தன்மை நிலவும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தொழில் நுட்ப மாற்றங்களால் முறைப்படுத்தப்படாத துறைகளான போக்குவரத்து, உணவு, பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் மாற்றம் நிகழும். இதில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் அனுராக் மாலிக் தெரிவித்திருக்கிறார். தற்போது முறைப்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் 3.8 கோடி வேலை வாய்ப்புகள் உள்ளன. 2022-ம் ஆண்டு 4.8 கோடி வேலை வாய்ப்புகள் இருக்கும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் முறைப்படுத்தப்பட்ட துறையில் 25 சதவீத வேலை வாய்ப்பு கூடுதலாக உருவாகும் என்றும் இந்த அறிக்கை கணித்திருக்கிறது.

இதற்காக 130 தொழில் துறை தலைவர்கள், கல்வியாளர்கள், துறை சார்ந்த சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்து கேட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x