கோவையில் தமிழ்நாடு ‘ஸ்டார்ட் அப்’ திருவிழா நிறைவு: 23 பேருக்கு மொரூ.3 கோடிக்கு முதலீட்டு ஆதார தொகை வழங்கல்

கோவையில் தமிழ்நாடு ‘ஸ்டார்ட் அப்’ திருவிழா நிறைவு: 23 பேருக்கு மொரூ.3 கோடிக்கு முதலீட்டு ஆதார தொகை வழங்கல்

Published on

கோவை: தமிழக அரசு சார்பில் கோவையில் நடைபெற்ற 2 நாள் ‘ஸ்டார்ட் அப்’ திருவிழா நேற்று நிறைவடைந்தது.

தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் ‘தமிழ்நாடு ஸ்டார்ட் - அப் திருவிழா’ கடந்த 19-ம் தேதி தொடங்கியது. தமிழக எம்.எஸ்.எம்.இ தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் விழாவை தொடங்கி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பேசினார்.

தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. தொழில்துறையில் சாதனை படைத்த வல்லுநர்கள் சிறப்புரையாற்றினர். பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். கண்காட்சி வளாகத்தில் 450-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அரங்குகள் அமைத்திருந்தன.

முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்றனர். மருத்துவ அவசர காலங்களில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கான அதி நவீன டிரோன், மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்படும் வகையில் பொருட்களை உற்பத்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன.

ஸ்டார்ட் - அப் திருவிழாவில் 23 பேருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மொத்தம் ரூ.3 கோடிக்கு முதலீட்டு ஆதார தொகை வழங்கப்பட்டது. 20 பெண் தொழில் முனைவோர்களுக்கு தொழில் விரிவாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் அருண்ராய், தமிழ்நாடு ‘ஸ்டார்ட் அப்’ இன்னொவேசன் திட்ட இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in