

பழநி: கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால், பழநி ஆயக்குடியில் கொய்யா விலை வீழ்ச்சியடைந்தது. கிலோ ரூ.13-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பழநி, ஆயக்குடி, சட்டப்பாறை, அமரபூண்டி, சத்திரப்பட்டி, கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு வந்து வெளி மாவட்டங்கள், கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக கொய்யா பழங்களை கொள்முதல் செய்கின்றனர். தினமும் 30 முதல் 40 டன் வரை விற்பனையாகும்.
தற்போது கொய்யா சீசன் நிறைவடைய உள்ள நிலையில், அதன் வரத்தும் குறைந்து வருகிறது. அதேநேரம், கேரள வியாபாரிகளின் வருகையும் குறைந்து வருவதால் கொய்யா விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. தற்போது ஒரு பெட்டி கொய்யா (22 கிலோ) ரூ.280 முதல் ரூ.400 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து கொய்யா விவசாயிகள் கூறியதாவது: கேரள மாநிலத்தில் சில பகுதிகளில் கொய்யா சீசன் தொடங்கியுள்ளது. அதனால் ஆயக்குடிக்கு கேரள வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. வரத்து குறைவாக இருந்தும் விலை சரிவடைந்து வருகிறது. கிலோ ரூ.13-க்கு விற்பனையாகிறது. கொய்யா பறிக்கும் கூலிக்கு கூட இந்த விலை கட்டுபடியாகாது. வேறு வழியின்றி கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.