Published : 03 Dec 2017 08:58 AM
Last Updated : 03 Dec 2017 08:58 AM

இணையதளம் மூலம் 300 பொது சேவைகள் வழங்க தமிழக அரசு திட்டம்: தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எம்.மணிகண்டன் தகவல்

பொதுச் சேவை வசதிகளை மேம்படுத்துவதற்காக 300 அரசு பொதுச்சேவைகளை இணையதளம் மூலமாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்துள்ளார். இந்த சேவைகள் இ-மாவட்ட திட்டம் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் என் றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்துறை கூட்டமைப்பான ஃபிக்கி, இ-காமர்ஸ் கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கை தொடங்கிவைத்து அமைச்சர் எம்.மணிகண்டன் பேசியதாவது: பொதுமக்களுக்கு பொது சேவைகளை வழங்கும் நடைமுறைகளை மேம்படுத்தவும் எளிமைப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு மொபைல் நிர்வாகத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மொபைல் போன் என்பது தொடர்பு கொள்வதற்கு மிக எளிமையான சாதனம். மேலும் குறைந்த விலையில் கிடைப்பதால் மொபைல் போன் அனைவரையும் சென்றடைந்துள்ளது. அதனால் மொபைல் போன் மூலம் அரசினுடைய சேவைகளை பொதுமக்களுக்கு சென்று சேர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே இணையதளம் மூலமாக பல்வேறு அரசு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிரத்யேகமாக அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 11,117 இ-சேவை மையங் கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்துறையை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஓசூர், திருநெல்வேலி, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களில் சிறப்பு பொருளாதாரம் மண்டலம் அமைப்பதற்கு தமிழக அரசு 1,322 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருக்கிறது. இதில் 946 ஏக்கர் நிலை சாப்ட்வேர் நிறுவனங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளன. இந்த பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ரூ.495 கோடியை தமிழக அரசு முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் நேரடியாக 68,900 வேலைவாய்ப்புகளும் மறைமுகமாக 1.37 லட்ச வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x