

வாரத்தின் தொடக்க நாளில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத் துடன் வர்த்தகத்தை தொடங்கி இருக்கின்றன. குறியீட்டில் இருக்கும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்ப வெளியாகி வருவதால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்து வருகின்றன.
ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் சென்செக்ஸ் 73 புள்ளிகள் உயர்ந்து 25715 புள்ளியில் முடிவடைந்தது. இதேபோல நிப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 7684 புள்ளியில் முடிவடைந்தது. ஆனால் வர்த்தகத்தின் இடையே நிப்டி 7700 புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது.
சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 25861 புள்ளிகளையும், நிப்டி 7719 புள்ளியையும் தொட்டன. எப்எம்சிஜி, ஆயில் அண்ட் கேஸ், கன்ஸ்யூமர் டியூரபிள் ஆகிய துறைகள் உயர்ந்து முடிவடைந்தன. மாறாக கேபிடல் குட்ஸ், ரியால்டி, பவர் ஆகிய துறைகள் சரிந்து முடிவடைந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ், ஐடிசி, ஆக்ஸிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய பங்குகள் உயர்ந்தும், டாடா பவர், கெயில், எஸ்பிஐ, பிஹெச்இஎல் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிடப்போகும் கடன் மற்றும் நிதிக்கொள்கை, பருவமழை ஆகியவற்றை பொறுத்து பங்குச் சந்தைகளின் அடுத்த கட்ட ஏற்றம் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுவரை சுமார் 70,000 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய் யப்பட்டிருக்கிறது.சனிக்கிழமை ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருப்பதால் 2 சதவீதம் வரை அந்த பங்கு உயர்ந்தது. எம்சிஎக்ஸ் நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை கோட்டக் மஹிந்திரா வங்கி வாங்குகிறது. இதனால் எம்சிஎக்ஸ் பங்கு 7.87 சதவீதம் உயர்ந்தது. பங்குச்சந்தைகள் ஆரம்ப கட்டத்தில் அதிகமாக உயர்ந்ததால் 220க்கும் மேற்பட்ட பங்குகள் தன்னுடைய 52 வார உச்ச பட்ச விலையை தொட்டன.