Last Updated : 14 Jul, 2014 10:34 AM

 

Published : 14 Jul 2014 10:34 AM
Last Updated : 14 Jul 2014 10:34 AM

பட்ஜெட் உரையும் குழப்பங்களும்

இந்தியா போன்ற ஒரு கலப்பு பொருளாதாரத்தில், அரசின் கொள்கைகளும் வரவு- செலவுகளும், நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். இதில், பட்ஜெட் எனப்படும் அரசின் வரவு செலவு, அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு இரு பிரதான வழிகளில் முயலும். ஒன்று, பொருளாதாரத்தை முறைப்படுத்தும் கொள்கைகள். மற்றொன்று மக்களிடம் பெறப்படும் வரி, அதனைக் கொண்டு செய்யப்படும் பொது செலவு. இதில் இரண்டாம் பகுதிதான் பட்ஜெட். அதாவது, அரசின் வருவாய் செலவு கணக்காகும்.

இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, இவை இரண்டும் சேர்ந்துதான் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற போதிலும், பட்ஜெட் அறிவிப்புகள் கொண்ட நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை அரசின் வரவு, செலவுகள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது சொல்லப்படாத ஒரு பொது விதி.

பட்ஜெட் உரையில் பட்ஜெட்டை பாதிக்கும் அறிவிப்புகள்

பட்ஜெட் உரையில் பட்ஜெட்டை பாதிக்காத அறிவிப்புகளும், பட்ஜெட் உரையில் இல்லாமல் வேறு சந்தர்ப்பங்களிலும் பட்ஜெட்டை பாதிக்கும் அறிவிப்புக்கள் வரலாம். இவை எல்லாம் பட்ஜெட், பொருளாதாரம் பற்றிய அரசின் கருத்துகளை முழுவதும் புரிந்துகொள்ள தடையாய் இருப்பவை. எனவே, நம் புரிதலின் வசதிக்காக பொருளாதாரம் குறித்த அரசின் அறிவிப்புகளை நான்கு பிரிவுகளில் அடக்கலாம்.

ஒன்று, பட்ஜெட் உரையில் பட்ஜெட்டை பாதிக்கும் அறிவிப்புகளும்.

இரண்டு, பட்ஜெட் உரையில் பட்ஜெட்டை பாதிக்காத பொது அறிவிப்புகள்.

மூன்று, பட்ஜெட் உரையில் இல்லாத பட்ஜெட்டை பாதிக்கும் அறிவிப்புகள்.

நான்கு, பட்ஜெட் உரையில் இல்லாத பொது அறிவிப்புகள்.

இந்த புதிய அரசு, ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு, வெளியிட்ட பொருளாதார அறிவிப்புகளும், பட்ஜெட் உரையையும் இந்த நான்கு பகுதிகளாக பார்ப்போம்.

பட்ஜெட் உரையில் சில முக்கிய அறிவிப்புகள் அரசின் வரவு, செலவுகளை பாதிப்பதாகவே இருக்கும்.

அரசுத் துறை வங்கிகளின் முதலாக்கத்தை உயர்த்த, இந்த வங்கிகளில் உள்ள அரசின் உபரி பங்குகளை விற்று அதனைக்கொண்டு வங்கிகளின் முதலாக்கத்தை உயர்த்துவது. இது ஒருவகை disinvestment, அரசின் வரி சாராத வருவாயை உயர்த்தும், அதற்கு இணையான செலவையும் உயர்த்தும்.

கிசான் விகாஸ் பத்திரங்களை மீண்டும் வெளி யிடுவது, பொது கணக்கில் வருவாயாக வைக்கப் பட்டு, அதற்கு வட்டி கொடுக்கவேண்டும். இந்த கணக்கிலிருந்து செய்யப்படும் முதலீடுகள் போதுமான முதலீட்டை பெறவில்லை என்றால், அதற்கு அரசு வட்டி செலவு செய்யவேண்டும்.

தற்போது உள்ள திறன் மேம்பாட்டு திட்டங்களை ஒருங்கிணைத்து புதிய திட்டம் உருவாக்குவது.

ரூ.1,000 கோடி செலவில் வானம் பார்த்த விவசாய நிலங்களுக்கு(புன்செய்) புதிய நீர் பாசன திட்டங்களை உருவாக்குவது.

2019-ம் ஆண்டுக்குள் எல்லா குடும்பங்களுக் கும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கும் திட்டம்.

நகரங்களை போன்று கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் திட்டம்.

ரூ. 5௦௦ கோடி செலவில் கிராமங்களில் மின்சாரம் வழங்கும் திட்டம்.

SC, ST, முதியோர், பெண்கள், குழந்தைகள் என்ற பலருக்கும் பயன் அளிக்கும் திட்டங்கள்.

கிராம வேலை உறுதி திட்டம், கிராம கட்டமைப்பு திட்டம், கிராம வாழ்வாதார திட்டம், கிராம வீட்டு வசதி திட்டம், கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி, விவசாயம் என்ற பலதுறைகளில் செலவுகள் பற்றிய அறிவிப்புகள்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கினால், அதற்கு வரிச் சலுகைகளும், கட்டமைப்பு வசதிகளும் கொடுக்கவேண்டும். இது ஒருபுறம் வரி வருவாயைக் குறைத்து, மறுபுறம் செலவுகளை அதிகப்படுத்தும்.

புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்படும் தொகை. பொது-தனியார் துறை இணைப்பில் (PPP) சிறு நகரங்களில் விமானத்தளங்கள் அமைப்பது.

கனிமங்கள் மீதான ராயல்டி தொகை உயர்த்தப் படும். இது போல பட்ஜெட்டை பாதிக்கும் மேலும் பல அறிவிப்புகள் பட்ஜெட் உரையில் இருந்தன. இதில் குறிப்பிட்டு சொல்லுபடியான ஒரு குறை என்னவென்றால், பல செலவு திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவேயில்லை.

பட்ஜெட் உரையில் பட்ஜெட்டை பாதிக்காத பொது அறிவிப்புகள்

செலவு மேலாண்மை கமிஷன் அமைப்பது, செலவுகளை செம்மையாகவும், செலவுகளின் பயன் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும் பயன்படும். இந்த அறிவிப்பு உடனடியாக இந்த வருட பட்ஜெட் செலவுகளை எவ்விதத்திலும் பாதிக்காது. இதனை பட்ஜெட்டுக்கு வெளியே செய்திருந்தால் நன்றாக இருக்கும். இதுபோல் உள்ள மற்ற அறிவிப்புகள் பின்வருமாறு:

GST தொடர்பான சட்டத்தை இந்த வருடத்தில் நிறைவேற்ற முயற்சிப்போம். 2012-ல் கொண்டுவரப்பட்ட பின்னோக்கிய மறைமுக வரிகள் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்க்க புதிய உயர்நிலை குழு.

அதிக வருமான வரி கட்டுபவர்களின் முன்னறிவிப்பு தொகை தொடர்பாக வரி நிர்வாகத்தில் மாற்றம் செய்வது. தொழில் மற்றும் வியாபார துறையினருடன் தொடர்ந்து விவாதித்து வரி சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதற்கு ஓர் உயர்நிலை குழு அமைப்பது. ரியல் எஸ்டேட் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான சட்டங்களை தளர்த்துவது.

பாதுகாப்புத் துறையின் பொருட்களை உற்பத்தி செய்யும் துறை, காப்பீட்டு துறை ஆகியவற்றில் 49% வரை அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது.

பொதுத் துறை நிறுவனங்கள் ரூ 2,74,941 கோடிக்கு முதலீடு செய்யும். இந்த அறிவிப்பு தெளிவில்லாமல் இருப்பதால், இந்த முதலீட்டை பொதுத் துறை நிறுவனங்கள் தங்களுடைய சொந்த பணத்தில் செய்யும் என்று வைத்துக்கொண்டால், அதனை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ரியல் எஸ்டேட், கட்டமைப்புத் துறைகளுக்கு டிரஸ்ட்கள் உருவாக்குவது, அரசின் செலவுகளை உயர்த்தாது.

விவசாயத் துறைக்கு வங்கிகள் ரூ. 8 லட்சம் கோடி கடன் வழங்கும் என்பதில் அரசின் செலவு ஏதும் இல்லை.

தற்போது நிலக்கரி துறையில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் மின்சார நிறுவனங்களுக்கு நிலக்கரி வழங்கப்படும். PPP அமைப்பில் 15,௦௦௦ கி.மீ தூரத்துக்கு பெட்ரோல், எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும். இதனை பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் சொந்த செலவில் செய்யும். சுரங்கத்துறையில் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைப்பது. மேலே சொல்லப்பட்ட எல்லா செய்திகளும், அந்தந்த துறை சார்ந்த விவாதங்கள் வரும் போதோ, அல்லது இவற்றை தனியாகவோ வெளியிடும்போது, இவற்றின் முக்கியத்துவம் கருதி பொது விவாதம் நடைபெறும். இப்போது, இந்த அறிவிப்புகளை விட பட்ஜெட் முக்கிய விவாதப்பொருளாக உள்ளதால், பொது விவாதத்தில் இவை இடம் பெறாது.

பட்ஜெட் உரையில் இல்லாத பட்ஜெட்டை பாதிக்கும் அறிவிப்புகள்

புதிதாக ஆட்சிக்கு வந்த ஒரு கட்சி, சில துரிதமான நடவடிக்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தும். இவற்றில் பல அரசின் பட்ஜெட்டை பாதிக்கக்கூடியதாக இருக்கும். பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவதால், அரசின் மானிய செலவுகள் குறையும். இதனை பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடுவதுதான் சிறந்தது. இறக்குமதி மீது வரியை அதிகரிப்பது(உதாரணமாக சர்க்கரை) அரசின் வரி வருவாயை உயர்த்தும். அவசியம் இருந்தால் மட்டுமே இது போன்ற பட்ஜெட்டை பாதிக்கும் அறிவிப்புகளை பட்ஜெட்டுக்கு வெளியே வெளியிடவேண்டும்.

பட்ஜெட் உரையில் இல்லாத பொது அறிவிப்புகள்

சில பொருளாதாரக் கொள்கை அறிவிப்புகள் பட்ஜெட்டை பாதிக்காது, ஆனால் அவை பொருளாதார முன்னேற்றத்திற்கு அவசியம். உதாரணமாக, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்பதும், இணையதள சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்பதும் இது போன்ற அறிவிப்புகள்தான்.

இந்தியாவில், பல வருடங்களாக பட்ஜெட் உரை அறிவிப்புகள், பட்ஜெட்டுக்கு வெளியே செய்யப்படும் அறிவிப்புகள் எல்லாமே பல அம்சங்களை உள்ளடக்கி குழப்பத்தை உண்டு பண்ணுவதாக உள்ளன.

இவற்றைத் தவிர்த்து, பட்ஜெட்டை பாதிக்கும் எல்லா அறிவிப்புகளையும் பட்ஜெட் உரையில் தெளிவாக அறிவிப்பதும், மற்றவற்றை பட்ஜெட்டுக்கு வெளியே அறிவிப்பதும், பொருளாதாரம் சார்ந்த விவாதங்களை போதிய புரிதலோடு அணுக உதவும்.

இராம. சீனுவாசன்- seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x