

ஆண்டுதோறும் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாளன்று பொருளாதார ஆய்வறிக்கையை (Economic Survey) மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். இதன்படி இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
நாடு சுதந்திரமடைந்த பிறகு 1947-ம் ஆண்டு முதலாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை 1958-ம் ஆண்டிலிருந்துதான் ஆரம்பமானது.
பொருளாதார ஆய்வறிக்கையை முதலில் பொருளாதார விவகாரங்களுக்கான துறை தயாரிக்கும். இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர்கள் ஒப்புதல் அளிப்பர். இறுதியாக இந்த அறிக்கைக்கு நிதித்துறைச் செயலர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் ஒப்புதல் அளிப்பர். இந்த ஆய்வறிக்கை மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் (சிஎஸ்ஓ) உதவியோடு தயாரிக்கப்படுகிறது.
இந்த அறிக்கையில் பல்வேறு காரணிகள் இடம்பெறும். உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட விஷயங்களோடு எதிர்வரும் காலத்தில் அரசு எடுக்க உள்ள நடவடிக்கைகளின் சுருங்கிய வடிவமாக இது அமையும்.
நாட்டின் பணவீக்க விகிதம், அந்நியச் செலாவணியின் ஸ்திரத்தன்மை, செலுத்த வேண்டிய கடன் தொகை உள்ளிட்டவற்றையும் விளக்கும்.
ஏழ்மை, வேலையின்மை, மேம்பாட்டு நடவடிக்கைகளை புள்ளி விவரத்துடன் இது விளக்கும்.
முந்தைய 12 மாதங்களில் நாட்டின் பொருளாதார நிலைமை எந்த அளவுக்கு இருந்தது என்பதை விளக்கும் விதமாக இது இருக்கும். நடப்பு நிதி ஆண்டில் அரசு கொண்டு வர உள்ள பெரிய மேம்பாட்டு திட்டப் பணிகள், அரசின் கொள்கைகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண் டிருக்கும்.
அரசின் பொருளாதார நிலைமை, எதிர்கொள்ளும் சவால்கள், கொண்டு வர உள்ள கொள்கைகளால் ஏற்படும் குறுகிய கால பலன்கள், நிதிக் கொள்கை, நிதி நிர்வாகம், பங்குச் சந்தையின் பங்கு மற்றும் அதில் தேவைப்படும் சமயத்தில் அரசு குறுக்கிடுவது, வெளிச்சந்தை கடன், வர்த்தகம், வேளாண்துறை, தொழில்துறை மேம்பாடு, சேவைத்துறை, எரிசக்தி, கட்டமைப்பு, தொலைத் தொடர்பு, மனித வள மேம்பாடு, பருவ நிலை உள்ளிட்டவற்றை விளக்கும் வகையிலும் பொதுமக்களுக்காக கொண்டு வர உள்ள கொள்கைகளை விளக்கும் வகையிலும் இந்த ஆய்வறிக்கை இருக்கும். அத்துடன் சர்வதேச பொருளாதார நிலையில் இந்திய பொருளாதாரம் வகிக்கும் நிலைமை பற்றியும் விளக்குவதாக இது இருக்கும்.
இந்திய பொருளாதாரத்தை நன்கு அறிய விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக ஆய்வறிக்கை அமையும். குறிப்பாக அரசியல்வாதிகள், பொருளாதார அறிஞர்கள், வர்த்தகர்கள், அரசு நிறுவனங்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் பயனுள்ள தகவல்களை உள்ளடக்கியதாக இந்த ஆய்வறிக்கை இருக்கும்.