Published : 02 Nov 2017 08:53 AM
Last Updated : 02 Nov 2017 08:53 AM

தொழில் புரிவதில் சாதகமான நாடுகள் பட்டியலில் 50 இடங்களுக்குள் இந்தியா முன்னேறும்: தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை செயலர் நம்பிக்கை

உலக வங்கியின் எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் 50 இடங்களுக்குள் வருவதற்கு ஏற்ப சீர்திருத்தங்கள் தொடரும் என்று மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை செயலர் ரமேஷ் அபிஷேக் கூறியுள்ளார். உலக வங்கி அடையாளம் கண்டுள்ள 200க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த முதலீடு சார்ந்த மாநாட்டில் பேசுகையில் அபிஷேக் மேலும் கூறியதாவது:

எளிதாக தொழில் புரிவதற்கு ஏற்ப உலக வங்கி அடையாளம் கண்டுள்ள சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் எளிதாக தொழில் புரிவதற்கான முதல் 50 நாடுகள் பட்டியலில் இடம் பெறும். ஏற்கெனவே உலக வங்கி அடையாளம் கண்ட 122 சீர்திருத்தங்களை இந்த ஆண்டில் இந்தியா மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார். இந்த ஆண்டில் மேலும் 90 சீர்திருத்தங்களுக்கு அரசு முயற்சித்து வருகிறது.

இந்த வாரத்தில், உலக வங்கி வெளியிட்ட எளிதாக தொழில் புரியும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி 100 வது இடத்தில் உள்ளது. வரிச் சீர்திருத்தத்தில் கொண்டு வந்த மாற்றம் இதில் முக்கிய பங்காற்றியுள்ளது. மேலும் அனுமதிகள், முதலீட்டாளர்களை பாதுகாப்பது மற்றும் திவால் நடைமுறைக்கான தீர்வுகள் காரணமாகவும் உலக வங்கியின் குறியீட்டில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

ஒரே ஆண்டில் 130-வது இடத்திலிருந்து 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். இது பெருமைப்படத்தக்க முன்னேற்றமாகும். இதற்கடுத்து முதல் 50 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற வேண்டும் என்கிற இலக்கில் செயல்பட வேண்டும்.

தொழில் புரிவதற்கான சூழலை மேலும் மேம்படுத்துவது குறித்து மத்திய அரசு பல்வேறு தொழில்துறையினரிடத்திலும் ஆலோசித்து வருகிறது. தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் சார்பில் பல்வேறு துறையினரிடமும் கருத்துகளைக் கேட்பதற்கான கூட்டங்களை தொடங்கிவிட்டோம்.

இந்த முயற்சி எங்களுக்கு அதிக பலன்களை அளித்துள்ளது. இந்த முறை தொழில்துறையினரின் கருத்துகள்தான் முக்கியமானது. அதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். அனைத்து அமைச்சகங்களும் கருத்துகளை கேட்டு வருகின்றன என்றார்.

உலக வங்கியின் அறிக்கையும், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய சீர்திருத்தமாக சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அங்கீகரித்துள்ளது. இந்த சீர்திருத்தத்தின் சாதகமான விளைவுகள் அடுத்த ஆண்டுக்கான உலக வங்கியின் பட்டியலில் இந்தியாவுக்கான குறியீட்டில் தெரியும்.

உள்கட்டமைப்பில் நிலவும் பற்றாக்குறை, கடினமான தொழிலாளர் கொள்கைகள் போன்றவை இந்த சூழலுக்கு மிகவும் சவாலாக உள்ளன என்று குறிப்பிட்டவர், மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாநில அரசுகள் திறன் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பை சீராக அதிகரிப்பதற்கான கொள்கைகளையும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக ஆயத்த ஆடை துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தோல் மற்றும் காலணி சார்ந்த துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில் கொள்கை துறையும் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அபிஷேக் கூறினார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x