ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
Updated on
1 min read

மும்பை: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையில் தெரிவித்துள்ளது. அதனால் ரெப்போ விகிதம் தற்போதுள்ள 6.50 சதவீதமாகவே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிதிக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, ரெப்போ விகிதத்தில் அடிப்படை புள்ளிகளில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படாது என வல்லுநர்கள் தெரிவித்தனர். அதன்படியே ரிசர்வ் வங்கி அதில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெறும். நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது காரணமாக ரெப்போ விகிதத்தில் தற்போது மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது. தக்காளி போன்ற காய்கறிகள், தானியங்கள், பருப்பு விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“நாட்டின் பொருளாதாரம் நிலையான வேகத்தில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி, உலக வளர்ச்சிக்கு 15 சதவீதம் பங்களிக்கிறது” என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

ரெப்போ விகிதம்? ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். ரிசர்வ் வங்கி தற்போது இதில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக வீடு, வாகனம், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் இப்போதைக்கு உயராது எனத் தெரிகிறது. ஏனெனில், வழக்கமாக ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான விகிதத்தை உயர்த்தினால், வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in