

மும்பை: இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாகி உள்ளது ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ (எஸ்பிஐ). இதன் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபத்தின் அடிப்படையில் எஸ்பிஐ முதலிடத்துக்கு வந்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது எஸ்பிஐ. நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கி. இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 2023-24 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.18,537 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இதே காலகட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈட்டிய நிகர லாபம் ரூ.16,011 கோடி ஆகும்.
கடந்த 2012-13 நிதியாண்டில் இந்தியன் ஆயில் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி நாட்டின் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி: பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம் மற்றும் ரீடெயில் மாதிரியான தொழில்களில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் குழுமத் தலைவராக முகேஷ் அம்பானி உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 95.7 பில்லியன் டாலர்களாகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அவர் 11-வது இடத்தில் உள்ளார்.