Published : 20 Nov 2017 10:41 AM
Last Updated : 20 Nov 2017 10:41 AM

ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நீதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆலோசனை

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்வதற்காக மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நீதிபதிகள், பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்டதிலிருந்து பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றை களைவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது ஜிஎஸ்டி வரி முறையில் இருக்கும் முக்கிய பிரச்சினைகள் வரும் காலத்தில் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக 12 நீதிமன்றங்களிலிருந்து 20 நீதிபதிகள், மூத்த அரசு அதிகாரிகள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போபாலைச் சேர்ந்த தேசிய நீதித்துறை அகாடமி சமீபத்தில் ஜிஎஸ்டி குறித்து கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர். இதில் ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அலகாபாத், ஆந்திரபிரதேசம், மும்பை, கொல்கத்தா, குஜராத், சென்னை, மத்திய பிரதேசம், கேரளா, ஜம்மு காஷ்மீர் என பல உயர் நீதிமன்றங்களிலிருந்து நீதிபதிகள் வந்து கலந்துகொண்டனர். ஜிஎஸ்டி இண்டலிஜன்ஸ் பிரிவு மற்றும் மத்திய கலால் வரி ஆணைய அதிகாரிகள் புதிய வரி விதிப்பு முறை குறித்து நீதிபதிகளுக்கு விளக்கியுள்ளனர். பொதுதளத்தில் பயன்பாட்டில் உள்ள ஆவணங்களை வைத்து நீதிபதிகளுக்கு புதிய வரி விதிப்பு முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் உள்ள குறைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனை நடைபெற்றன.

``புதிய வரி விதிப்பு முறைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கு அதில் உள்ள பிரச்சினைகளைக் களைவதற்கும் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது’’ என சட்ட அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் இருக்கின்றன. சானிட்டரி நாப்கின் என்பது மக்களுக்கு மிக அவசியமான பொருள். ஆனால் அதன் மீது வரி விகிதம் குறைக்கப்படவில்லை. ஆனால் மற்ற சில பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பன குறித்து சமீபத்தில் நீதிபதி கீதா மிட்டல் மற்றும் ஹரி சங்கர் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள மொத்தம் 31 உறுப்பினர்களில் ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லாததது குறித்து வருத்தமும் தெரிவித்திருந்தனர். டெல்லி உயர் நீதிமன்றமும் இதே கருத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி-யால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பாதிப்பு

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஆன்லைன் நிறுவனமான பூட்மோ (boodmo) கூறியுள்ளது. ஆன்லைன் மூலம் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனையும் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த வரி விதிப்பு முறையிலிருந்து இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் அதை கொண்டு சேர்ப்பதற்கு மிக அதிகபட்ச வரியாக 28 சதவீத ஜிஎஸ்டி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. சிக்கலான ஜிஎஸ்டி வரி விதிப்பால் இ-காமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசிய, பூட்மோ நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸாண்டர் டானிலென்கோ கூறுகையில், நாங்கள் இப்போதுதான் இந்த துறைக்கு வந்துள்ளோம். புதிதாக வளர்ந்து வரும் துறையில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆனால் ஜிஎஸ்டி சட்டம் தற்போது மிகக் கடுமையான பாதிப்பை உருவாக்கியுள்ளது. இந்த சிக்கலான வரி விதிப்பு முறையால் குறிப்பாக இ-காமர்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். நிறுவனங்களுக்குத் தேவையில்லாத பல்வேறு ரசீதுகளால் எங்களது சப்ளையர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இ-காமர்ஸ் நிறுவனங்கள் சப்ளையர்களை நம்பியே இயங்கி வருகின்றன. இதனால் நாங்கள் இவர்களது பொருளை வாங்கவோ விற்கவோ முடியாத நிலை உள்ளது. முக்கியமாக எங்களது சப்ளையர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பி விற்க தயாராக இல்லை.

எங்களுக்கு அனுப்பி எங்கள் மூலமாக விற்பனை செய்கின்றனர் எங்களது இ-காமர்ஸ் சந்தையில் சிறு குறு நிறுவனங்கள்தான் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு ஜிஎஸ்டி பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அது இ-காமர்ஸ் நிறுவனங்களையும் பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x