Published : 17 Nov 2017 10:30 AM
Last Updated : 17 Nov 2017 10:30 AM

சிங்கப்பூர் தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்: நிதியமைச்சர் அருண் ஜேட்லி அழைப்பு

சிங்கப்பூர் தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி அழைப்பு விடுத்துள்ளார். சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசு முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளதன் காரணமாக அதிக அந்நிய நேரடி முதலீட்டை பெறும் நாடாக இந்தியா மாறியுள்ளது. அதாவது அந்நிய நேரடி முதலீட்டுக்கு மிக உகந்த நாடாக இந்தியா மாறியுள்ளது. மத்திய அரசு மிக சீராகவும் பொறுமையாகவும் சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி, திவால் சட்டம், பொதுத்துறை வங்கிகளுக்கு மீண்டும் முதலீடு வழங்குவது போன்ற சீர்திருத்தங்களை ஒன்றன் பின் ஒன்றாக செய்து வருகிறது. இந்த சீர்திருத்தங்கள் மூலம் வங்கிகளில் நிதி நிலை சீரடையும். மேலும் தனியார் முதலீடு அதிகரிக்கும்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விதிகள் மிக தாராளமாகவும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவும் இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. மேலும் தொழில் புரிவதற்கு உகந்த நாடுகளுக்கான பட்டியிலில் இந்தியாவை முன்னேற்றி செல்ல கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன் விளைவாகத்தான் தொழில் புரிவதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் 2014-ம் ஆண்டு 146-வது இடத்தில் இருந்த இந்தியா சமீபத்தில் வெளியான 2017-ம் ஆண்டுக்கான பட்டியலில் 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று முக்கிய சீர்திருத்தங்களால் அரசு நிர்வாகத்தின் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. ரொக்கத்தில் இயங்கி வந்த இந்திய பொருளாதாரம் ரொக்கமில்லா பொருளாதாரமாக மாற இந்த சீர்திருத்தங்கள் உதவி புரிந்துள்ளன. மேலும் முறைசாரா பொருளாதாரமாக இயங்கி வந்த பொருளாதாரம் முறைசார்ந்த பொருளாதாரமாக மாறியிருக்கிறது.

இந்தியா வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருக்கிறது. ரூபாயின் மதிப்பு நிலையாக இருக்கிறது. அந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. முதலீட்டுக்கான உகந்த சூழல் இருக்கிறது. ஆகவே சிங்கப்பூர் தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்.

ஆதார் இந்தியாவில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் நிதிச்சேவை, ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை மற்றும் அரசு மானியங்கள் ஆகியவை ஆதார் இணைப்பு மூலம் நேரடியாக பயணாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சிங்கப்பூரின் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னத்தை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து விவாதித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x