

உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து மாநில அமைச்சர்களுடன் வெள்ளிக் கிழமை (ஜூலை 4) மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த ஆண்டு எல்-நினோ விளைவாக பருவ மழை குறையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இதனால் விளைச்சல் குறைந்து உணவுப் பொருள்களின் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது. இதை திறம்படக் கையாண்டு உணவுப் பொருள்களின் விலை உயராமல் கட்டுப்படுத்துவதற்கு எந்தெந்த மாற்று வழிகளைக் கையாள்வது என்பது குறித்து மாநில உணவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி அனைத்து மாநில உணவு அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமை தாங்க உள்ளார். மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைஎடுத்தபோதிலும் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குகளின் விலை உயர்ந்து வருகிறது. போதுமான அளவுக்கு விளைச்சல் இருந்தபோதிலும் இவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வேளாண் பொருள்களின் விலை உயர்வு மற்றும் பருவமழை குறைபாடு குறித்து ஆலோசனை நடத்தப்படும்.