Published : 11 Nov 2017 10:26 AM
Last Updated : 11 Nov 2017 10:26 AM

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ரூ.6 லட்சம் கோடி கறுப்புப் பணம் வெளியேற்றம்: மத்திய அரசு தகவல்

மத்திய அரசு கடந்த ஆண்டு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் ரூ.6 லட்சம் கோடி கறுப்புப் பணம் புழக்கத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டு ஓராண்டாகிய நிலையில் இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை அரசின் மீது சுமத்தி வருகின்றன. பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு பெரும்பகுதி கரன்சி வங்கிக்கே திரும்பிவிட்டது. இதனால் எந்த நோக்கத்திற்காக, அதாவது கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தை இத்திட்டம் நிறைவேற்றவில்லை என்றும் கூறி வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசு புழக்கத்திலிருந்து ரூ.6 லட்சம் கோடி கறுப்புப் பணம் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சகம் அளித்த தகவல் பின்னணியில் நாடாளுமன்ற குழு ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம் செய்யப்படாமலிருந்திருந்தால் உயர் மதிப்பிலான கரன்சிகளில் 50 சதவீத அளவுக்கு கறுப்புப் பணமாக புழக்கத்திலிருந்து பதுக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது

நாடாளுமன்ற நிலைக் குழு (நிதி) பணமதிப்பு நீக்கம் தொடர்பாகவும், கறுப்புப் பணம் தொடர்பாகவும் பிற அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து தகவல்களைத் திரட்ட உத்தேசித்துள்ளது. பணமதிப்பு நீக்கத்தின் முழு தாக்கம் குறித்து ஆராய இது உதவும் என நிலைக்குழு நம்புகிறது.

நவம்பர் 8-ம் தேதி நிலவரப்படி உயர் மதிப்பிலான (ரூ.500 மற்றும் ரூ.1,000) நோட்டுகளின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி அடிப்படையில் இந்த தொகை ரூ.18 லட்சம் கோடியாக 2017 நவம்பரில் அதிகரித்திருக்கும்.

ரிசர்வ் வங்கி அறிக்கையில் ஜூன் 2017 வரை வங்கிகளால் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.15.28 லட்சம் கோடியாகும். செப்டம்பர் வரையிலான காலத்தில் உயர் மதிப்பிலான நோட்டுகள் ரூ.12 லட்சம் கோடி வரை புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது முன்பிருந்த உயர் மதிப்பு நோட்டுகளின் புழக்கத்தைக் காட்டிலும் 50% குறைவாகும். தற்போது ரூ.500 கரன்சி ரூ.2.94 லட்சம் கோடிக்கும் ரூ.2000 கரன்சி ரூ.6.57 லட்சம் கோடி க்கும் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உயர் மதிப்பிலான நோட்டுகளை நீக்கி, அதற்கு மாற்றாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது உள்ளிட்டவற்றுக்கு அரசு எவ்வளவு செலவு செய்தது என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், அதிக சேமிப்பு வந்த போதிலும் வங்கிகள் கடன் வழங்குவதற்கு மெத்தனம் காட்டுவதேன் என்றும் கேட்டுள்ளனர். சில கேள்விகளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x