

செல்போன் சேவை அளிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலி சர்வீசஸ், ஏர்செல் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 3-ஜி சேவையை இதன் வாடிக்கை யாளர்கள் பெற முடியும்.
தத்தமது வாடிக்கையாளர்கள் 3-ஜி சேவை ஒருங்கிணைப்பை நாடு முழுவதும் பெறுவதற்காக இம்மூன்று நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவ னங்கள் 3-ஜி சேவையை அளிக்க 13 இடங்களில் லைசென்ஸ் பெற்றுள்ளன. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் வசம் 9 இடங்களில் 3 ஜி சேவை அளிப்பதற்கான லைசென்ஸ் உள்ளது. இம்மூன்று நிறுவனங்களும் சேர்வதன் மூலம் மொத்தமுள்ள 22 இடங் களுக்குமான சேவையை இம்மூன்று நிறுவன வாடிக்கை யாளர்களும் பெற முடியும்.
ரிலையன்ஸ் நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம், இமாசலப் பிரதேசம், பிஹார், ஒடிசா, அசாம், ஜம்மு காஷ்மீரின் வட கிழக்குப் பகுதிகளில் தொலைத் தொடர்பு வட்டாரங்களில் சேவை அளிக்கிறது. இந்த ஒப்பந் தத்தின் மூலம் இந்நிறுவன சேவை அல்லாத ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகளில் சேவை அளிக்க முடியும்.
இதேபோல ஏர்செல் நிறுவனம் டிடிஎஸ்எல் நிறுவனத்துடன் சேர்ந்ததால் மகாராஷ்டிரம், குஜராத், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில் சேவை அளிக்க முடியும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதிக கட்டணம் உள்ள டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் சேவை அளிக்க டாடா மற்றும் ஏர்செல் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வாய்ப்பளிக்கும். 2013 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு 3.62 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடி பேர் 3 ஜி வாடிக்கையாளர்களாவர்.