பொது வரி விதிப்பு தவிர்ப்பு விதிமுறைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்

பொது வரி விதிப்பு தவிர்ப்பு விதிமுறைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்
Updated on
1 min read

பொது வரி விதிப்பு தவிர்ப்பு (ஜிஏஏஆர்) விதிமுறைகளை வரும் ஏப்ரல் 2015-ம் ஆண்டு முதல் அமல்படுத்தலாமா என்பது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று வருவாய் துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். பிக்கி அமைப்பு நடத்திய விழாவில் இதை அவர் தெரிவித்தார்.

ஜிஏஏஆர் கொண்டுவரப்படும் என்று தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. உண்மை என்னவென்றால் புதிய அரசு இதுகுறித்து முழுமையாக ஆராயவில்லை. இதுகுறித்து விவாதித்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார். இதற்கான ஆய்வுக் கூட்டம் விரைவில் நடைபெறும். போதுமான காலம் இருக்கிறது. இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வரிச்சலுகை பெறுபவர்களுக்காக இந்த விதியை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. தற்போதைய விதிமுறைப்படி மார்ச் 2013-க்கு பிறகு ஆரம்பித்த திட்டங்கள் இந்த விதியின் கீழ் வரும். வரும் ஏப்ரல் 1-ம் தேதி ஜிஏஏஆர் அமலுக்கு வரும் என்று மக்களவைக்கு எழுத்து மூலம் மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை பதில் அளித்தார். இதன்மூலம் இந்த விஷயம் மீண்டும் பரபரப்பானது.

விரைவில் வங்கிகள் இணைப்பு

வங்கிகளை இணைப்பது குறித்து நடப்பு நிதி ஆண்டில் முடிவு செய்யப்படும் என்று நிதிச்சேவைகள் பிரிவின் செயலாளர் ஜி.எஸ். சாந்து அதே நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இந்த வருடம் இதற்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இந்த ஒருங் கிணைப்பு தேவையானது கூடவே வங்கித்துறையை பலப் படுத்தவேண்டும் என்றார் சாந்து. ஒருங்கிணைப்பில் பலவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன. தகுதி அடிப்படையில் இவை செய்யப்படும்.

இது எளிதில் முடியக்கூடியது மட்டுமல்லாமல் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். அதனால் படிப்படியாக இவை செய்யப்படும் என்றார். பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார். செய்தியாளர்களிடம் பேசியபோது பெரிய வங்கிகள் அதன் துணை வங்கிகளுடன் இணைக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in