

நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ. 43 ஆயிரம் கோடி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக பங்கு விற்பனை (ஆஃபர் ஃபார் சேல் – ஓஎப்எஸ்) முறையைப் பின்பற்ற நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக இந்த நடைமுறையை இந்திய உருக்கு ஆணையம் (செயில்) நிறுவன பங்கு விற்பனையில் கடைப்பிடிக்கத் திட்டமிட்டு அதை செப்டம்பர் மாதம் செயல்படுத்த நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஓஎப்எஸ் எனப்படும் பங்கு விற்பனை முறைக்கு மிகச் சிறந்த வரவேற்பு இருப்பதை அறிந்து அரசு இந்த வழியைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது. பொதுமக்களிடம் பங்களிப்பை அதிகரிப்பதற்கு இந்த வழியே சிறந்தது என்று நிதியமைச்சகம் கருதுகிறது.
இது தொடர்பாக பங்கு விலக்கல் துறை மற்றும் நிதி அமைச்சகமும் இணைந்து பங்கு பரிவர்த்தனை வாரியத்துடன் (செபி) பேச்சு நடத்தி வருகின்றன. எஃப்பிஓ எனப்படும் தொடர் பங்கு வெளியீடு மூலம் பொதுமக்களின் பங்களிப்பு 35 சதவீத அளவுக்கு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தொடர் பங்கு வெளியிடுவதாயிருந்தால் குறைந்தபட்சம் 3 மாதம் முதல் 4 மாதம் வரையாகும். ஆனால் ஓஎப்எஸ் முறையில் செயல்படுத்த 15 நாள்கள் போதுமானது. இதைக் கருத்தில் கொண்டே நிதி அமைச்சகம் ஓஎப்எஸ் முறையைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
ஓஎப்எஸ் முறையில் செயில் நிறுவனத்தில் அரசுக்குள்ள பங்குகளில் 5 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் செபி வெளியிட்ட வழிகாட்டு நெறியில், பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்குள்ள பங்குகளை 25 சதவீத அளவுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
இதனடிப்படையில் பங்குகளின் அளவைக் குறைத்துக் கொள்வ தோடு வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது. செயில் நிறுவனத்தைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, என்ஹெச்பிசி, ஆர்இசி, பிஎப்சி ஆகிய நிறுவனங்களில் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.
மொத்த இலக்கில் 30 சதவீதம் ஓஎன்ஜிசி நிறுவன பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் 5 சதவீத பங்கு விற்பனை மூலம் ரூ. 18 ஆயிரம் கோடியும், கோல் இந்தியாவின் 10 சதவீத பங்கு விற்பனை மூலம் ரூ. 23 ஆயிரம் கோடியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்கு விற்பனை மூலம் ரூ. 1,800 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.